வாழ்வை கறுப்பாய் மாற்றிவிட்டாய் - என்
பகலை எங்கு சிறை வைத்தாய்,
வாழ்வை வெறுக்க வழியமைத்தாய் - எனக்கு
கவலை தவிர எதை தந்தாய்?
மறுப்புகள் எனக்குப் பழக்கமடி - நீ
மறுத்தால் மட்டும் மயக்கமடி,
வெறுப்புகள் கூட விருப்பமடி - நீ
வெறுத்தால் மட்டும் வருத்தமடி!
கனவுகள் காணும் நேரத்திலும் - கண்ணே
கண்களுக்கிங்கே உறக்கமில்லை,
கனவுகள் தான் கண்கள் ஓரத்திலே - என்
உணர்வுகள் இன்னும் இறக்கவில்லை!!
கண்ணைப் பறித்துக் கொண்டவள் நீ - எனக்கு
கனவை மட்டும் தந்ததென்ன,
உண்மை நிலையை அறிந்தபின்னும் - அடி
ஊமையாய் இருக்கம் விந்தையென்ன?
வந்தால் நீயும் என்வழியில் - என்
காயம் எல்லாம் ஆறிவிடும்,
வெந்தால் மனசு வழியென்ன கண்ணே
மாயமாய் வாழ்வு மாறிவிடும்.
உள்ளத்தின் சோகக் கதவுகளை - நீ
மெல்ல வந்து திறந்துவிடு,
பொல்லாத மோகம் என்றால் - முடிவை
சொல்லாமல் என்னை மறந்துவிடு!!
------------------------------------
(C) விவிக்தா(1996)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment