Saturday, October 31, 2009

துன்ஹிந்த நீர்வீழ்ச்சி


தண்ணீர் ஊற்றி
வளர்த்த மரமல்ல - இது
தண்ணீராகவே
வளர்ந்த மரம்.



இந்த அதிசய விளக்கில்
எண்ணையே தீபமாக
எரிகிறது,
தீபமே எண்ணையாக
வழிகிறது.



அந்த மலைநாட்டு(ப்)
பால்காரன்
பாலில் தண்ணீரைக்
கலக்கவில்லை,
தண்ணீரில் பாலைப்
பிரிக்கிறான்.



எத்தனை வருடங்களாய்
மலையகத்தின்
கலையகத்தில்
இந்த அற்புத நடனம்
அரங்கேறுகிறது....
அடடா,
அங்கே பாறைகளில்
எதிரொலிப்பது
இரசிகர்களின்
கை தட்டல்கள் தானா?



வெள்ளை நிறத்தில்
வானவில் ஒன்று - இது
கண்ணுக்கு விருந்தாகும்!
கவலைக்கும் மருந்தாகும்!!



தற்கொலை புரிவதிலும்
இத்தனை ஆனந்தமா...
வீழ்ச்சியிலும் சிரிக்கிறாய்!!
புதிய கீதை
போதிக்கிறாய்!!



எல்லாம் சரி பெண்ணே..
பாறை இடுக்குகளில் நீ
ஆனந்த கானம் தான்
மீட்டுகிறாய்...
எவரைப் பிரிந்ததற்காய்
வெள்ளைப் புடவை
உடுத்துகிறாய்??

--------------------(c)Viviktha - 1998

Saturday, October 3, 2009

மெழுகுதிரியா களிமண்ணா உறுதியான காதல்....

நீ மெழுகாக,
நான் திரியாக,
நாம் மெழுகுதிரியாக
நம் காதல் சில காலம்.

நீ உருகிவிட்டாய்,
நான் கருகிவிட்டேன்,,
பின்னர் ஒரு நாளில்
யாரோ கிழித்த தீக்குச்சியால்.

மெழுகு உருக
திரி எரிந்ததா...
திரி எரிய
மெழுகு உருகியதா..

தம் காதல் தோல்விக்கு
தீக்குச்சிதான் காரணமா?

அடுத்தவர் சதியில்
உருகும் காதல் வேண்டாம்,
இறுகும் காதல் வேண்டும்.

மெழுகு போல் அல்ல!
களிமண் போல!!

Friday, May 22, 2009

சின்னச் சின்ன ஓவியங்கள்....

1)
கூடவே ஓடிவரும்
வாகனப் பயணத்தில் மேகங்களும்
வாழ்க்கைப் பயணத்தில் சோகங்களும்!

2)
ஒரு பூவைச் சூழ்ந்து
ஒரு கோடி மொட்டுக்கள்,
வானக் கூந்தலில் நட்சத்திரங்கள்!

3)
அழகான கவிதையது
நடுவில் முற்றுப்புள்ளி
அவள் நெற்றியில் பொட்டு!

4)
நழுவிய இதயம்
காதலியின் காலடியில்,
காதலியோ என் பிடியில்!

5)
உன்னைப் பிரிந்த பின்னும்
என்னைப்பிரிய மறுக்கும்
நாட்குறிப்பில் உன் ஞாபகங்கள்!

6)
சோகம்தான் ஆனால் சுகம்
நிகழ்வது முன்னையது,
நினைவில் பின்னையது!

7)
முழு நிலவில்
பவளப் பாறை,
காதலியே இன்னும் சிரி!

காதல் நெருப்பு!

பஞ்சும் இருந்தது,
பக்கமாகவே
நெருப்பும்
இருந்தது,

இளங்காலைப் பொழுதில்
தாலாட்டிய தென்றலின்
மெல்லிய வேகத்தில்
பற்றிக்கொண்டது
சமுதாயத்தின் தேகம்!

வேறென்ன...

பஞ்சாய் மாறிப்
பறந்து போனது
காதல்!

கண்ணீரில்
அணைகிறது
நெருப்பு!!

Friday, May 15, 2009

அப்ப நீ செய்வதெல்லாம் சரிதானா....?

வாழ்வை கறுப்பாய் மாற்றிவிட்டாய் - என்
பகலை எங்கு சிறை வைத்தாய்,
வாழ்வை வெறுக்க வழியமைத்தாய் - எனக்கு
கவலை தவிர எதை தந்தாய்?

மறுப்புகள் எனக்குப் பழக்கமடி - நீ
மறுத்தால் மட்டும் மயக்கமடி,
வெறுப்புகள் கூட விருப்பமடி - நீ
வெறுத்தால் மட்டும் வருத்தமடி!

கனவுகள் காணும் நேரத்திலும் - கண்ணே
கண்களுக்கிங்கே உறக்கமில்லை,
கனவுகள் தான் கண்கள் ஓரத்திலே - என்
உணர்வுகள் இன்னும் இறக்கவில்லை!!

கண்ணைப் பறித்துக் கொண்டவள் நீ - எனக்கு
கனவை மட்டும் தந்ததென்ன,
உண்மை நிலையை அறிந்தபின்னும் - அடி
ஊமையாய் இருக்கம் விந்தையென்ன?

வந்தால் நீயும் என்வழியில் - என்
காயம் எல்லாம் ஆறிவிடும்,
வெந்தால் மனசு வழியென்ன கண்ணே
மாயமாய் வாழ்வு மாறிவிடும்.

உள்ளத்தின் சோகக் கதவுகளை - நீ
மெல்ல வந்து திறந்துவிடு,
பொல்லாத மோகம் என்றால் - முடிவை
சொல்லாமல் என்னை மறந்துவிடு!!

------------------------------------
(C) விவிக்தா(1996)

இடி - மின்னல் - மழை!

சில நாட்களாய்
தலை "இடி"

உன்
புன்னகை "மின்னல்" தான்
காரணமா

புரிகிறது

விரைவில் கண்ணீர்
"மழை" வரும்
என் வாழ்வில்!!

------------------
(C) விவிக்தா(1995)

என்காதல் என்னவென்று......


காதலெனும் தூரிகை எடுத்து
உன் மல்லிகைப் பூ மனதைத் தொட்டு
வர்ணக் குழம்புகளாய்
வரைந்து வைத்ததெல்லாம்
காகிதப்பரப்பில்
வெறும் நிழற்படங்கள் அல்ல - என்
இதயப்பரப்பில்
உன் பாதத் தடங்கள்!!

காதலெனும் களிமண் குழைத்து
கண்ணீர் துளிகளை முத்தாய் இழைத்து
கட்டியெழுப்பிய
காதல் மாளிகை
உளிகொண்டு செதுக்கிய
சிற்பங்களாய் அல்ல - தமிழ்
மொழி கொண்டு செதுக்கிய
கவிதைகளாய்!!

காதலெனும் வானவில் வளைத்து
வானத்து மீன்களையும் வரவழைத்து
உன் நாணத்தில் தோய்த்து
கயிறாகத் திரித்ததெல்லாம்
நீட்டிய கழுத்தில்
மாலைகளாய் அல்ல - வீணையில்
மீட்டிய ராகங்களின்
சோலைகளாய்!!

------------------
(C) விவிக்தா(1999)