Friday, October 31, 2014

மரபுக் கலைகளும் மாற்றமும்

இக் கட்டுரையின் தலைப்பானது தன்னிச்சையாக எம்மை மூன்று விடயங்களைப் பற்றிய புரிதலின் அவசியத்தை நோக்கித் துரத்துகிறது. இங்கு குறிப்பிடப்படும் “மரபு”, “கலை”, மற்றும் “மாற்றம்” ஆகிய மூன்று சொற்களும் வெறுமனே ஒரு வாக்கியத்தினூடாகவோ அல்லது வரைவிலக்கணத்தினூடாகவோ இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதல்ல. ஏனெனில் அவை தனித்தனியாக தமக்கான தனித்துவத்தைக் கொண்டமைந்தவை மட்டுமன்றி தனித்தனியான மூன்று கட்டுரைகளுக்கான தலைப்புகளாகவூம் காணப்படுகின்றன. எனவே நாம் சற்று விரிவாக இவற்றை ஆராய்வதினூடாக எமது புரிதலை இலகுபடுத்திக் கொள்வோம்.

மரபு

நாம் மரபு எனும் சொல்லைச் சரதாரணப் பேச்சு வழக்கில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாவிக்கின்றௌம். மரபுக்கவிதை, மரபணு, மரபுத்தொடர், மரபியல் நோய்இ மரபுக்கூறு, மரபுக்கலை போன்றவை அவற்றுட் சில. இவற்றில் மரபணு அல்லது மரபணுச் சோதனை (DNA Test) மற்றும் மரபியல் நோய் (Inherited Diseases) எனும் சொற்கள் தற்காலத்தில் மிகவூம் பிரபலமடைந்திருப்பதுடன் அனைவராலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாகவூம் காணப்படுகின்றன. அவை மரபு எனும் சொல்லும் எமக்கு முந்திய சந்ததியும் ஏதோவொரு வகையில் தொடர்பு பட்டுள்ளதையும் கோடிட்டுக் காட்டுகிறது.

மரபியல் விஞ்ஞானமானது (Genetics Science) மரபு என்பதை ஒரு செய்தியெனவூம்; அச்செய்தியை தலைமுறைகளினூடாக எடுத்துச் செல்லும் கருவியே மரபணு (Gene) எனும் மிகச்சிறிய மூலக்கூறுகள் எனவும் விளக்குகிறது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அல்லது பரம்பரையில் சில தலைமுறைகள் கடந்தபின்னரும் உருவ ஒற்றுமை காணப்படுவதற்கும், சில கலைத் திறமைகளும், நல்ல குரல்வளம் போன்ற அரிய வரங்களும் தலைமுறை தலைமுறையாக தொடர்வதற்கும் இந்த மரபணுக்களே காரணமாகும். அவ்வாறே பரம்பரையினூடாக இம் மரபணுக்களினால் காவிச் செல்லப்படும் நிறக்குருடு, குருதி உறையாமை போன்ற நோய்களும் காணப்படுகின்றன. அவையே பரம்பரை நோய்கள் (Genetic Diseases) எனக் குறிப்பிடப் படுகின்றன.

ஓர் குறிப்பிட்ட இனத்தில் அல்லது பரம்பரையில் பிறக்கும் மனித உடல் தொடர்பான செய்திகள் மரபணுக்கள் மூலம் தலைமுறைகளினூடாக தொடர்வதைப் போன்றே அக் குறிப்பிட்ட இனத்தின் அல்லது பரம்பரையின் வாழ்க்கைமுறை தொடர்பான செய்திகளும் தொடர்கின்றன. இவையே பாரம்பரியம் என்றும், பண்பாடென்றும், நாட்டுப்புற மரபென்றும், இன்னும் பல சொற்களாலும் குறிப்பிடப்படுகின்றது. சமய நம்பிக்கைகளும், சடங்குகளும், வாழ்க்கை முறைகளும், வேட்டையாடுதல், விவசாயம், சேமித்தல், உபசரித்தல், தற்காப்பு, பொழுது போக்கு போன்ற அத்தனை செய்திகளும் தலைமுறைகளினூடாக கடத்தப்படுகின்றன. இவற்றைக் காவிச்செல்ல எம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கருவிகளையே நாம் இன்று கலைகள் என்று போற்றுகின்றோம்.

கலை

கலை என்றால் என்னவென்பதற்கு பல்வேறு முறைகளில் விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. கலை என்பது உணர்வுகளின் வெளிப்பாடு என்று உளவியலாளர்கள் கூறுவர். நாம் காண்பதை மட்டுமல்ல உணர்ந்ததையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் ஓர் உத்தியே கலை எனவும் கூறலாம். பொதுவாகக் கலைகள் அதனைப் படைப்பவர்களுக்கும், அக்கலையை இரசிப்பவர்களுக்கும் மனதிற்கு மகிழ்ச்சி தருவதுடன் பல்வேறு வகையான செய்திகளையும், அறிவுரைகள், நற்பண்புகள், பண்பாட்டு விழுமியங்கள், அறிவியல் போன்றவற்றை பரப்புவதற்கும் ஏதுவாக அமைகின்றன. நாம் எதனைப் போற்றிப் பாராட்டுகின்றௌமோ அதுவவும் கலையாகிறது. எனவேதான் வெறுமனே பார்த்து இரசிப்பதனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு படைக்கப் படுவதனைவிட இரசிகர்களை சிந்திக்கத் தூண்டும் படைப்புகள் காலம் காலமாக நின்று நிலைத்து பாராட்டைப் பெறுகின்றன. கலை காலத்தால் அழியாதது எனும் பெருமையைப் பெற்றதும் இவ்விதம் தான்.

நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம், அறுபத்துநாலு கலைஞானம் என்பது பழந்தமிழ் இலக்கியப் பாகுபாடாகும். “ஆயகலைகள் அறுபத்திநான்கு” என கம்பர் குறிப்பிடுவதும் இதனைத்தான். அந்த அறுபத்தி நான்கு கலைகளும் எவையென்பதனை இங்கு குறிப்பிடுவது இக்கட்டுரைக்கு அத்தனை அவசியமானதல்ல. எனினும் நாம் பொதுவாகக் கலைகள் என்பதால் விளங்கிக் கொள்வதை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
1. நிகழ் கலைகள்: (நடனம், இசை, நாடகம்இ கூத்து, சொற்பொழிவு, தற்காப்பு கலை போன்றவை)
2. எழுத்துக் கலைகள்: (கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவை)
3. கட்புலக் கலைகள்: (ஓவியம், சிற்பம், புகைப்படம், கட்டடக்கலை போன்றவை)
4. கட்புலனாகாக் கலைகள்: (மருத்துவம், மாந்திரீகம், சூனியம் போன்றவை)

கலை என்பது ஓர் படைப்பு. எந்தக் கலையை எடுத்துக்கொண்டாலும் அங்கு ஓர் படைப்பாளியாக மனிதன் நிச்சயம் தொடர்பு பட்டிருப்பதனைக் காணலாம். மனிதனால் ஆக்கப்படாத எதனையும் நாம் கலை என்று குறிப்பிடுவது கிடையாது. நாம் வாழும் சூழலில் எம்மைச் சுற்றி ஏராளமான அழகிய பொருட்கள் இயற்கையாகவே காணப்படுகின்ற போதும் இயற்கையின் அழகை நாம் கலை என்றோ கலைப் பொருள் என்றோ குறிப்பிடுவதில்லை.

வானத்திரையில் மேகத் தூரிகைகள் தீட்டும் அற்புத ஓவியங்களோ, கடலின் தாளத்திற்கு கரையில் ஆடும் அலைகளின் அதிசய நடனமோ அல்லது காட்டு மரங்களிலிருந்து மீட்டப்படும் சில்வண்டுகளின் ரீங்கார இசையோ கலை என்று போற்றப்படுவது கிடையாது. அன்றலர்ந்த ரோஜாப் பூ ஓர் கலைப்படைப்பன்று, மாறாக அதனை ஓவியமாகத் தீட்டினாலோ, ஒளிப்படம் எடுத்தாலோ கவிதையாகப் பாடினாலோ அது கலையாகிறது. ஓர் படைப்பாளியின் கைவண்ணத்தில் பிறப்பதே கலையாகும்! ஓர் உன்னதக் கலைப்படைப்பின் பெருமையெல்லாம் அதனை ஆக்கிய கலைஞனையே சென்றடைய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. எனினும் அம் மாபெரும் கலைஞன் வாழும் சூழலும், அக்கலைஞனைச் சுற்றி நடப்பவையும், சூழலிலும் அக்கலைஞனின் உள்ளதிலும் ஏற்படும் மாற்றங்களும் கலைப்படைப்பின் தரத்தினை தீர்மானிப்பதில் அளப்பரிய பங்கினை வகிக்கின்றன.

மாற்றம்

சுமார் நானூற்றி ஐம்பது கோடி (4.54 Billion) வருடங்களுக்கு முன்பு உருவாகியதாக கணிக்கப்பட்டுள்ள இப் பூமி முதற்கொண்டு 200,000 வருடங்களுக்கு முன்னர் தோன்றி இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதகுலம் உட்பட இங்குள்ள அனைத்து உயிரினங்களும் சடப்பொருட்களும் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்பட்டே வந்திருக்கின்றன. மாறிவரும் இவ்வுலகில் மாறாதிருப்பது மாற்றம் மட்டுமே என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு கூற்று.

ஐம்பூதங்களும் மாறுகின்றன. அவற்றில் உருவாகிய தாவரங்களும், அவற்றை சுகிக்கும் விலங்குகளும் கூட மாற்றத்திற்குட்படுகின்றன. எல்லாவற்றையும் மாற்றியமைக்கவல்ல மனித குலத்திலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. கட்புலனிக்கு வசப்படுபவை மட்டுமன்றி, தத்துவங்கள், கோட்பாடுகள், பண்பாட்டு நெறிகள், வழிபாட்டு முறைகள், கலாசார விழுமியங்கள், கலை மரபுகள் என கட்புலனாகாதவை கூட இம் மாற்றங்களில் தப்பியதில்லை.

ஓன்றிலிருந்து இன்னுமொன்றாகப் போதலே மாற்றம் எனப்படுகிறது. எமது மூதாதையர் மர வாழ்க்கையிலிருந்து தரை வாழ்க்கைக்கு மாற முற்பட்ட போதே நாகரீகம் வளரத் தொடங்கியது. தமக்கான கலை கலாசார மரபுகள் தோற்றம் பெற்றதுதிலும், மெருகூட்டப்பட்டதிலும் மாற்றத்தின் பங்கு இருந்தே வந்திருக்கிறது. கலை கலாசார மரபுகளின் மாற்றத்திற்குப் பிரதானமாக புதிய கண்டுபிடிப்புக்கள், நவீனமயமாதல், தொழில்மயமாதல், நகரமயமாதல், கலாசாரப் புரட்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி, மேற்கு நாடுகளின் காலணித்துவ ஆட்சி மற்றும் மேற்கத்தைய கலாசாரக் கலப்பு போன்ற பல்வேறு காரணிகளைக் கூறலாம். மாற்றம் நல்லது என பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பினும் மாற்றத்தின் விளைவுகள் அல்லது மாற்றம் ஏற்படுத்தும் தாக்கங்கள் எப்பொழுதும் நன்மையானதாக மட்டுமே இருந்ததில்லை.

எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் மாற்றத்தின் நிழல்  கலைத்துறையில் குறிப்பாக மட்டக்களப்பின் மரபுக் கலைகளில் படியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆயின் அது எமது கலை மரபுகளில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது அல்லது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மட்டக்களப்பின் மரபுக் கலைகள் எவையெவை என்று பட்டியலிடுவதோ அல்லது அக்கலைகளின் சிறப்பம்சத்தினை விபரிப்பதோ இக்கட்டுரையின் பிரதான நோக்கமன்று. அவ் வரலாற்று முக்கியத்துவப் பணியைப் பல்வேறு அறிஞர்களும், ஆய்வாளர்களும் ஏலவே செய்து முடித்துவிட்டனர். மழையில் நனைந்துகொண்டு அந்த ஆனந்தத்தை அனுபவித்தபடியே மழையை அறிந்து கொள்வது ஒரு வகை. ஜன்னலோரம் அமர்ந்தபடி மழையைப் பார்த்து இரசித்து புரிந்து கொள்ளுதல் இன்னுமொரு வகை. இரண்டாவது வகை அணுகுமுறையினூடாகவே மீதிக் கட்டுரையை தொடர்வோம்.

வரிவடிவத்தில் படைக்கப்படும் “இயல்”, ஒலி வடிவத்தில் பாடப்படும் “இசை” மற்றும் உடல்மொழியால் வெளிப்படுத்தப்படும் “கூத்து” ஆகிய முத்தமிழ் கூறுகளில் மட்டக்களப்பின் மரபுவழி வந்த கலையாக கூத்துக் கலையே பிரதான இடத்தை வகிக்கிறது. மட்டக்களப்பின் பாரம்பரிய கலைகளில் கரகம், கோலாட்டம், கும்மி, வயல்வெளிப் பாட்டுகள், மீனவர் பாடல்கள், கொம்புமுறி போன்ற பல்வேறு வகைகள் காணப்பட்ட போதிலும் கூத்திற்கென்று ஓர் தனியிடம் காணப்படுகின்றது. கூத்து என்பது நடிப்புக்கலையையும், ஆடற்கலையையும் உள்ளடக்கியது என்பதால் இச்சொல் நாடகம் - நாட்டியம் இரண்டுக்கும் பொதுவானது.

பழந்தமிழர் வாழ்வில் இறைவழிபாடு மிகவூம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த வேளையில் அவர்கள் ஆடியும், பாடியும் இறைவனை வழிபட்டதே கூத்தின் பிறப்பு. மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான கூத்து பிரதானமாக கண்ணகி வழிபாட்டினை மையப்படுத்தியே ஆடப்பட்டதெனினும் அது வெறுமனே இறைவழிபாட்டிற்காக மட்டும் தோன்றியதன்று. மகாபாரதம், இராமாயணம் போன்ற காவியங்களும், புராணக்கதைகளும், வரலாறுகளும் தலைமுறை தலைமுறையாக அறியப்பட்டு வந்தது கூத்தின் மூலமே. வேளாண்மை, வேட்டையாடுதல் போன்ற சாதாரண வாழ்க்கைமுறைகளும் அவற்றில் சந்திக்கும் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் தந்திரங்களும் கூத்தின் மூலமே சந்ததி சந்ததியாக கற்பிக்கப் பட்டது. வாகரைப் பகுதிக்கே தனித்துவமான அப்பகுதி மக்களால் இன்றும் ஆடப்படும் “புலிக்கூத்து” ஓர் சிறந்த உதாரணமாகும்.

காட்டில் வேட்டைக்குச் செல்லும் போது காட்டு விலங்குகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் உத்திகளே இதன் கருப்பொருள். அவ்வாறே பொழுது போக்கை மையப்படுத்தி கேலியும் நகைச்சுவையும் கொண்டதாக ஆடப்படும் கூத்துகளும் உள்ளன. மட்டக்களப்பின் சந்திவெளிப் பகுதியில் ஆடப்படும் ஒருபுறம் முனிவர்களும், மறுபுறம் குறவர்களும் அமர்ந்து மத்திர வித்தைகளால் மோதுவது போன்ற மகிடிக்கூத்து மிகவவும் பிரசித்தி பெற்ற ஓர் பொழுது போக்குக் கலையாகும். பறைமேளக் கூத்து போன்ற குறிப்பிட்ட ஓர் சாதியினரால் மட்டும் ஆற்றுகை பண்ணப்படும் கலைவடிவங்களும் காணப்படுகின்றன.

இப்பிரதேசத்தில் மூன்று தசாப்தமாக இடம்பெற்ற கொடிய யுத்தம் இப் பாரம்பரியக் கலைகளை வளர்ப்பதிலும் இளம் சந்ததியினருக்குக் கற்பிப்பதிலும் பாரிய சவால்களை ஏற்படுத்தியிருந்ததை எவரும் மறுப்பதற்கில்லை. நான்கு இளைஞர்கள் ஒன்றாய்க் கூடுவதே உயிரைப் பணயம் வைப்பதற்குச் சமன் என்றிருந்த காலகட்டத்தில் முற்றுமுழுதாக ஒரு தலைமுறையே இப் பாரம்பபரியக் கலைகளின் தொடர்ச்சி அறுந்த நிலையில் காணப்படுகின்றதென்பதே யதார்த்தம். அன்றைய உணவிற்கு அதே நாள் வருவாயை மாத்திரம் நம்பியிருக்கும், பொருளாதார ரீதியில் மிகவும் நலிந்த நிலையிலுள்ள அதே கிராமப்புற மக்கள் தான் இக்கலைகளைச் சாவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பையும் சுமக்கின்றனர். பயிற்சியின் போது ஏற்படும் தினசரி செலவுகளுக்கே திண்டாடும் நிலையில் இக்கலைகளை மேடையேற்றும் செலவுகள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மேலும் இக்கலைகளைப் பயில வேண்டிய இளம் சமுதாயத்தினரின் இரசணையூம், ஆர்வமும் வேறு ஒரு தளத்தில் காணப்படுவது மற்றுமொரு சவால். சினிமாப் படங்களும், தொலைக்காட்சி நாடகங்களும், முகப்புத்தகம் (FaceBook) போன்ற சமூக வலைத்தளங்களும், மட்டைப்பந்தாட்டமும் (Cricket) அவர்களின் பிரதான ஆர்வமாகக் காணப்படும் இன்றைய நவீன காலகட்டத்தில் கூத்துப் பழகவும்இ இசை பயிலவும் எத்தனை பேர் முன்வருவார்கள்? உலகின் எந்தவொரு மூலையிலும் நடக்கும் நிகழ்வுகளையும் காணொளியாக (Video) சேமித்து வைத்திருக்கும் மிகவும் பிரபல இணையத் தளமான “யூ டியூப்” (You Tube) தளத்தில் இன்றைய திகதியிலுள்ள அனைத்துக் காணொளிகளையும் ஒருவர் சோறு தண்ணீர் கூட இல்லாமல் அமர்ந்து பார்த்து முடிப்பதென்றாலும் சுமார் 600 வருடங்கள் தேவைப்படும் என்கிறது ஓர் ஆய்வு. கவிதை வாசிக்கவே நேரம் இல்லாமலிருக்கும் பரபரப்பான இவ்வுலகில் கவிதை எழுதுவதற்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது?

பறை அடிப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் போன்ற மனப்பாங்கு உள்ள இச்சமூகத்தில் பறைமேளக் கூத்து போன்றவற்றைப் பழகுவதையும் அரங்கேற்றுவதையும் புதிய தலைமுறையினர் தவிர்க்கத்தான் செய்வார்கள். இது போன்ற யதார்த்தங்களும் மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைகள் மருவி வருவதற்கான மற்றுமொரு காரணம். பெற்றோரும் தமது பிள்ளைகளின் எதிர்கால நிரந்தர வருமான நோக்கில் தொழில் முறைக் கல்வியையே முன்னுரிமைப் படுத்துவதோடு பிள்ளைகள் தாமாகவே கலைகளின் பக்கம் ஈர்க்கப்பட்டாலும் கூட பரீட்சையில் சிறந்தபெறுபேறுகள் பெறுவதனைக் கருத்திற் கொண்டு பிள்ளைகளின் கலையார்வத்தைக் கலைத்துவிடும் நிலமைகளும் குறிப்பாக நகர்ப்புறங்களில் காணப்படுகின்றன.

கால மாற்றத்தாலும் நவீன கருவிகளின் வருகையாலும் சில கலைவடிவங்களின் தேவைகள் மங்கிவிட்டன. சித்திரப் பிரதிமை (Portrait) என்பது ஓவியக் கலையின் ஓர் உன்னத வடிவமாகும். ஓரு நபரின் முகத்தை அப்படியே அவரின் அந்தக் கணத்தின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக (Mood) வரைவது சித்திரப் பிரதிமை எனப்படும். நாட்கணக்கில் வரையப்படும் இக்கலை வடிவத்தில் நவீன ஓளிப்படக்கருவிகளின் (Camera) வருகை மிகப்பெரும் தாக்கத்தினைச் செலுத்தியிருக்கிறது. மின்னல் வெட்டும் நேரத்தில் படமெடுத்து விடலாம். இடிமுழங்கி முடியூமுன் பிரதியெடுத்துவிடலாம். அவ்வாறே மாதக்கணக்கில் இராட்சத அளவில் வரையப்பட்டுவந்த விளம்பர ஓவியங்களும் சினிமா பதாதைகளும் (Cut-out) கணணியின் துணையூடன் சில மணித்தியாலங்களில் சாத்தியமாகின்றன. அடுத்த தலைமுறையில் இப்படிப்பட்ட கலைஞர்களைக் காணக்கிடைக்காது என்பது ஓரளவு உறுதியாகிவிட்டது.

இவ்வாறு பல்வேறு சவால்கள் காணப்படினும் மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைகள் முற்றுமுழுதாக முடங்கிப் போய் விடவில்லை. கலாசார அமைச்சும், பிரதேச செயலகங்கள் தோறும் உள்ள கலாசார உத்தியோகத்தர்களும், கிராம மட்ட கலைக்குழுக்கள், கலாசாரச் சங்கங்கள், மூத்த கலைஞர்கள், கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தினர், கலையார்வலர்கள் என பல்வேறு மட்டங்களில் இன்று இக்கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருவதனைக் காணலாம். எந்த மாற்றங்கள் எம் கலைகளில் தாக்கம் செலுத்துகின்றனவோ அதே மாற்றங்களை ஊக்க சக்தியாக மாற்றி கலைகளை வளர்ப்பதே புத்திசாலித் தனம்.

நவீன தொழில்நுட்பங்களையும், கருவிகளையும், கணணிப் பயன்பாட்டையும், இலத்திரனியல் ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் ஒதுக்கிவிட்டு எம் கலைகளை வளர்ப்பதென்பது இனிவருங் காலங்களில் சாத்தியப்படாது. எமது கலை மரபுகளைக் காலக்குதிரையின் முதுகின் மீது ஏற்றிவிடாமலும் அதே வேளை அதன் கடிவாளத்தை விட்டுவிடாமலும் அதற்குச் சமாந்தரமாகப் பயணிக்கவேண்டிய கடப்பாடு ஒவ்வொரு கலைஞனுக்கும் உண்டு.

கவிதைகளும், கட்டுரைகளும் இணையத்தில் ஏறிவிட்டதனால் இன்று பலரைச் சென்றடைகிறது. இசையும்இ நாடகமும் ஒலி-ஒளி வடிவங்களாக பதிவு செய்யப்பட்டு கணணி மூலம் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும் போது கூடுதல் வரவேற்பைப் பெறுகின்றன. ஒலிவாங்கிகளும், ஒலி பெருக்கிகளும் கண்ணைக் கவரும் பல வர்ணங்களில் பாய்ச்சப்படும் ஒளி வெள்ளமும் இன்று மேடை நிகழ்வுகளுக்குக் கூடுதல் பெறுமதி சேர்க்கின்றன. ஓலிபெருக்கும் சாதனங்களின் வருகை மேடையில் தோன்றும் கலைஞன் சாதாரண குரலில் பேசுவதையோ அல்லது பாடுவதையோ அரங்கின் பின்வரிசைப் பார்வையாளன் வரை கொண்டு சேர்ப்பதினால் மேடைக் கலைஞனின் பணி இலகு படுத்தப்படுகிறது.

அந்நாட்களில் மங்கிய ஒளியில் மேடையில் தோன்றும் கலைஞனின் முகபாவங்கள் தூரத்திலிருக்கும் பார்வையாளனுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காக முகத்தில் சற்று தூக்கலாக ஒப்பனைக் கலைஞர்கள் தம் கைவரிசையைக் காட்டியிருப்பர். இதனால் அருகிலிருந்து ஒருவரையொருவர் பார்க்கும் சக கலைஞர்கள் தம்மையறியாமல் சிரித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு. சற்றுக் கூடுதலாக கண் மையை அல்லது உதட்டுச்சாயத்தைத் தீட்டியிருக்கும் ஒருவரைப் பார்த்து “கூத்திற்கு வேடமிட்டதைப் போன்று” எனும் கேலி இன்றும் எம்மத்தியில் இருக்கிறது.

ஆனால் தற்பொழுது மேடை நிகழ்வுவூகள் பெரும்பாலும் பிரகாசமான வெளிச்சமும் சமகாலத்தில் உருப்பெருக்கி இராட்சதத் திரைகளில் ஒளிபரப்பப்படும் வசதிகளைக் கொண்ட அரங்குகளில் நிகழ்த்தப் படுகின்றன. எனவே யதார்த்தமான அழகான ஒப்பனைகள் தற்பொழுது சாத்தியமாகியிருக்கின்றன. ஒளியமைப்பினால் மேடையின் கட்புலனாகும் பகுதிகள் தற்பொழுது கட்டுப்படுத்தப் படுத்தப்படுகிறது. எனவே அரங்கின் வெளிச்சமான பகுதியில் நிழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் போது இருளான பகுதியில் அடுத்த காட்சிக்கான தயாரிப்புகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும். இதனால் தற்பொழுது திரை திறந்து மூடுதல் எனும் செயற்பாடு அற்றுப் போனதுடன் நேரத்தை சேமிக்கவும் உதவுகின்றது.

நவீன தொழில்நுட்ப வசதிகள் எமது பாரம்பரியக் கலைகளைப் பழகுவதிலும், அரங்கேற்றுவதிலும் மாத்திரம் கைகொடுக்கவில்லை, மாறாக அவற்றை ஆவணப்படுத்துவதிலும், பிற நாடுகளில் - பல சமூகத்தினரின் மத்தியில் சிறப்பம்சங்களை எடுத்தியம்பவும் பயன்படுகின்றன. கடந்த 11/04/2014 அன்று பேராசிரியர் மௌனகுரு அவர்களின் இராவணேசன் கூத்து சிங்கப்பூர் நகரில் காணொளிக்காட்சியாக அரங்கேற்றப்பட்டதுடன் இலங்கைத் தமிழ் கூத்துக்களும் அது நாடகமாக வளர்ந்த வரலாறு பற்றியும் இராவணேசன் கூத்து தயாரிப்பைப் பற்றியும் பேராசிரியரினால் ஓர் அறிமுகம் வழங்கப்பட்டது. இவ்வாறான விளம்பரப்படுத்தல் செயற்பாடுகளின்றி ஓர் கலையின் ஆயுளை நீடிக்கமுடியாது.

ஓரு கலையை படைப்பவனின் உத்திகளும் சிந்தனைகளும் மெருகேற அதற்கேற்றாற்போல் பார்வையாளனின் இரசிப்புத்திறணும் வளரவேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில் பார்வையாளனைத் தயார்படுத்தும் பொறுப்பும் கலையைப் படைப்பவனையே சாரும்.

இவ்வாறு நவீன தொழில்நுட்ப வசதிகளையும் வாய்ப்புக்களையும் உள்வாங்கிக் கொண்டு இக் கலைத்துறையில் ஈடுபடுபவர்கள் எமது பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வார்கள் என்பதில் ஐயமில்லை.

இசை மற்றும் நாடகக் துறைகளைப் பொறுத்தமட்டில் இத் தொழில்நுட்பப் பயன்பாடுகள் அக்கலைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அக்கலைகளைப்; பார்வையாளனிடம் கொண்டு சேர்க்கும் உத்தியில் தான் தாக்கம் செலுத்துகின்றன. உதாரணமாக நவீன தொழில்நுட்பங்களின் ஆதிக்கத்தினால் கூத்தின் பிரதான அம்சங்களான களரி கட்டுதலோ, பின்பாட்டுக்காரர்களோ, இசைக்கருவிகளோ, கட்டியங்காரர்களோ ஏன் ஆடைஅணிகலன்களோ கூட மாறிவிடவில்லை. இவ்வாறு மாறாமல் மரபைப் பேணுவது அக்கலையில் ஈடுபடும் ஒவ்வொரு கலைஞனதும் கடமை.

நன்னூல் நூற்பா எண் 387 இல் மரபு என்பது என்னவென்று இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
“எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
 செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே”
அறிவுடையோர் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் மரபாகும் என்பதே இதன் பொருள். உதாரணமாக பசு ஈன்றதைக் “கன்று” என்றும் நாய் ஒலியெழுப்புதலை “குரைத்தல்” என்றும் கூறுவது மரபு. பசுவின் பிள்ளையென்றோ அல்லது நாய் பேசியதென்றோ கூறுவது மரபு அல்ல.

சொல்லையும் பொருளையும் மட்டும் அல்லாது அவர்கள் மேற்கொண்ட செயல்களையும் படைத்த கலைகளையும் அவ்வாறே பின்பற்றுவது தான் மரபு. இன்று நேரமின்மை காரணமாகவும், இடப் பற்றாக்குறையினாலும், போதிய தௌிவின்மையினாலும் எமது கலை கலாசார நிகழ்வூகள் சில மரபை மீறியதாகவும் நிகழ்த்தத் தலைப்படுகின்றன. நாட்டியக் கலையில் பின்பாட்டுக்காரர்கள் ஓர் முக்கிய அங்கமாகும் ஆனால் சில மேடை நிகழ்வுகளில் பின்பாட்டுக்காரர்களைக் காணக்கிடைப்பதில்லை. அவர்களின் இடத்தை இசைத்தட்டுக்களும் இசை நாடாக்களும் ஈடுசெய்கின்றன. ஆனால் அவை எமது மரபல்ல.

முற்றத்திலிட்ட அரிசிமாக் கோலம் இன்று அச்சடிக்கப்பட்டு ஒட்டும் வடிவிலிருக்கிறது. வாசலில் தொங்கும் மாமாவிலைத் தோரணம் கடதாசியில் வந்தாயிற்று. விறகடுப்பு மூட்டி வாசலில் வைத்த தைப்பொங்கல் பானை சமயல் அறைக்குள் சென்று எரிவாயு அடுப்பில் ஏறிவிட்டது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நிலவும் இடப்பிரச்சினை மற்றும் பரபரப்பு வாழ்க்கை போன்றவை இந்நிலைக்குக் காரணமாக இருப்பதுடன் அதைத் தவறென்றும் கூறமுடியாது. இருப்பினும் அது எமது மரபல்ல.

யோ.நிசந்தராசன்இ (நாடகமும் அரங்கியலும் - சிறப்புக்கற்கை) என்பவர் தனது “பறை மேளக்கூத்தும்; அதன் இன்றைய நிலையும்” எனும் கட்டுரையில் பின்வருமாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
“பறைமேளக்கூத்தினுடைய மரபுத்தன்மைகள் மாற்றமடையாமல் ஆற்றுகைகள் இடம் பெறுதல் வேண்டும். ஆனால் இன்று படித்தோர் மட்டங்களிலே நவீனத்துவ சிந்தனைகள் உள்வாங்கப்பட்டு பாரம்பரியக் கலைகளை மாற்றுவது ஒரு மனம் வருந்தத்தக்க செயற்பாடாகவே அமைகின்றது. கடந்த 2011 பங்குனி 25,26,27ஆம் திகதிகளிலே யாழ்ப்பாணத்திலே இடம் பெற்ற இசை விழாவிலே பல கலை நிகழ்வுகள் இடம் பெற்றன. இவ்விழாவில் பறைமேளக்கூத்தானது மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவக நாடகத்துறை மாணவர்களால் அளிக்கை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சொர்ணாலி என்றவாத்தியக்கருவி வாசிக்கப்படவில்லை. அத்தோடு உடையமைப்பு பரதநாட்டிய பாணியில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அத்தோடு இதன் ஆட்டமுறைகள் கூத்துடனும், கண்டிய நடனங்களுடனும் தொடர்பு பட்டனவாகவே இருந்தது. இவ்வாறான செயற்பாடுகள் பாரம்பரியத்தன்மைகளினை மீறுவதாகவே இருக்கின்றது.”

இவ்வாறான மரபை மீறும் செயற்பாடுகள் தொடருமேயானால் நிச்சயமாக அடுத்து வரும் சந்ததியினரிடம் நாம் எமது அடையாளங்களைத் தொலைத்தவர்களாகவே வாழ்வோம்.

“பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியே மரபு” (Tradition) என்கிறது தமிழ் அகராதி.

மரபின் முக்கிய அம்சங்களே பழமையைப் பேணுதலும், எம் முன்னோர்கள் சொன்னதைக் கண்ணெனப் போற்றுதலும்தான். ஏனெனில் எமது முன்னோர்கள் கண்டறிந்து சொல்லிய உண்மைகளும் நன்மைகளுமே தலைமுறை தலை முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்து இன்று மரபாக நிலைத்திருக்கின்றது.

மரபுக் கலைகள் என்பவை எமது முன்னோர்கள் பயணம் செய்த பாதைகள். மனப்பாரங்களை இறக்கி வைக்க அமைக்கப்பட்ட சுமைதாங்கிகள். வாழ்கையின் வாசலை அலங்கரிக்க அவர்கள் கட்டிய அழகிய தோரணங்கள். எமது வாழ்க்கையை அவ் அழகிய பாதையினூடே பயணிக்க நாம் கடமைப்பட்டவர்கள். பாதையை செப்பபனிடுவதும் அலங்கரிப்பதும் இன்றைய காலத்தின் தேவையாக இருக்கலாம், ஆனால் பழமை மாறாதிருப்பதை அத்தனை கலைஞர்களும் உறுதிப்படுத்திக் கொள்ளுவது அவசியமாகும். நவீனத்துவச் சிந்தனைகள் கலைத் தோரணங்களைக் கலைத்துவிடக் கூடாது என்ற எண்ணம் படைப்பாளிக்கும் இருக்கவேண்டும். பார்த்து இரசிப்பவர்களுக்கும் வரவேண்டும்.

கால மாற்றத்தில் கலைகள் பயணிக்கும் வாகனமும், வேகமும் மாறட்டும். ஆனால் கலை மரபுகள் மாறாதிருக்கட்டும்!

ப.முரளிதரன்இ 47/1, புதிய கல்முனை வீதி, மட்டக்களப்பு. -  http://amfb.webs.com 

(2014 ஆம் ஆண்டு மண்முனை வடக்கு கலை கலாசாரப் பேரவையினால் வெளியிடப்பட்ட தேனகம் சஞ்சிகையில் இடம்பெற்ற கட்டுரை)

Tuesday, October 18, 2011

மக்கள் மனங்களிலும் ஒளிவீசும் மட்டக்களப்பு கலங்கரை விளக்கு!




மட்டக்களப்பில் வாழும் ஒவ்வொருவருக்கும் முகத்துவாரம் என்ற சொல்லைக் கேட்டவுடன் ஒரு வெளிச்சவீடும், வெளிச்சவீடு என்று கூறும் போதெல்லாம் முகத்துவாரம் எனும் பெயரும் நினைவில் வந்தே தீரும். இந்து சமுத்திரத்தின் கிழக்குக் கரைவழியே இலங்கைத் தீவின் பெருமைமிக்க நிலப்பரப்புகளினின்று தனது ஒளிக்கரங்களை நீட்டி அவ்வழியே பயணிக்கும் கப்பல்களை கிச்சு கிச்சு மூட்டியூம், எச்சரிக்கை செய்தும் உறவாடிய - உறவாடும் ஆறு வெளிச்சவீடுகள் வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றன. அவற்றில் தனது புவியியல் அமைவிடத்தின் (Geographical Location) காரணமாக மட்டக்களப்பு வெளிச்சவீடு தனித்தன்மை பெறுகிறது.









வானத்து நீலத்தை தரைக்கு இடம்பெயர்த்தபடி – ஓர் இராட்சதக் கண்ணாடியை நிலத்தில் விரித்தது போல மட்டுநகரெங்கும் பரவிக்கிடக்கும் கடல்நீரேரி மற்றும் உலகின் மூன்றாவது பெரியதும், அழகியதுமான இந்து சமுத்திரம் என்பன சந்தித்துக்கொள்ளும் புள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இக் கலங்கரை விளக்கு மட்டக்களப்பின் மற்றுமொரு அடையாளம் ஆகும்.

மட்டக்களப்பின் இதயப்பகுதியாகிய புளியந்தீவிலிருந்து வடக்குத்திசையில் மட்டக்களப்பு பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்து 5 – 6 கிலோமீற்றர்கள் தொலைவில் இது அமைந்துள்ளது. மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகிலிருந்து வாகனத்தில் பயணிக்கும் ஒருவர் சராசரியாக 15 நிமிடங்களில் இதனை அடைய முடியும். மட்டக்களப்பு “பார் வீதியில்” சுமார் 3 கிலோமீற்றர்கள் வரை பயணிக்கும் போது எதிர்ப்படும் கடல்நீரேரியுடன் அவ்வீதி முடிவடைந்துவிட்டது போன்று தென்படும். அந்தப் புள்ளியில் எமது முகங்களில் வந்து மோதும் கடல்காற்றின் சுகானுபவத்தை பெற்றுக்கொண்டு இடப்பக்கமாகச் செல்லும் வீதியில் மேலும் இரண்டு கிலோமீற்றர்கள் பயணிக்கும் போது பாலமீன்மடு எனும் அழகிய கிராமம் எதிர்ப்படும். அங்கிருந்து வலப்பக்கமாகத் திரும்பி சுமார் 500 மீற்றர்கள் வரை சென்றால் அங்கு ஓர் அழகிய அலங்கார வளைவு உங்களை வரவேற்கும்.

நீல வானத்தை ஊடறுக்கும் வெளிச்சவீடும், வெளிச்சவீட்டை மையங்கொண்ட பொழுதுபோக்குப் பூங்காவும், பூங்காவின் தடுப்புச் சுவரில் வந்து மோதும் நீரலைகளும், நீரலைகளின் தாளத்திற்கேற்ப நடனமாடும் தோணிகளும், தோணிகள் புகமுடிகாதபடி அடர்ந்து வளர்ந்த கண்டல் காடுகளும், கண்டல் காடுகளில் வாசம்செய்யும் பறவையினங்களும், பறவைகள் சிறகடிக்கும் நீல வானமும் என இப்பிரதேசத்தின் அழகை வார்த்தைகளால் விபரிக்க இயலாது.

வெளிச்சவீடு எனும் எண்ணக்கரு உருவாக்கப்பட்ட நோக்கம் இன்றைய விஞ்ஞான சாதனைகளாலும் சாதனங்களாலும் வெற்றிகொள்ளப்பட்ட நிலையில் உலகில் பல இடங்களிலும் வெளிச்சவீடுகள் இன்று இருட்டு வீடுகளாகவும் வெளவால்களின் குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன. எனினும் மட்டக்களப்பு வெளிச்சவீடானது இன்றும் மங்காப் புகழுடன் புதுப் பொலிவுடன் காட்சி தருவதற்குக் காரணம் அது தனது ஒளிவீச்சை கடலை நோக்கி மட்டுமல்ல – மக்களின் மனங்களை நோக்கியும் செலுத்தியிருக்கிறது போலும் எனக்கூறினால் அதில் தவறேதும் இல்லை. இன்று பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் இக்கலங்கரை விளக்கின் மேனியில் காலமும் இயற்கையும் வரைந்த கோடுகள் ஏராளம். அந்தத் தழும்புகளையெல்லாம் மறைத்தபடி கம்பீரமாகக் காட்சி தரும் இக் கோபுரத்தைப் பற்றியும் இதன் தனித்தன்மை பற்றியும் சற்று விரிவாக பார்ப்போம்.


1913ம் ஆண்டு பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில் 27 மீற்றர் (89 அடி) உயரமும் கீழ்ப் பகுதியில் கனசதுர வடிவாக (Cube) ஆரம்பித்து பின்னர் உறுளை வடிவாகச் சென்று உச்சியில் ஓர் மகுடத்தைத் தாங்கியது போன்றதாகவும் இது அமைக்கப்பட்டது. இதன் மகுடத்தினுள் ஒளி முதலும்இ கண்ணாடி வில்லையூம் (Light Source and Lens) ஓர் அழகிய கண்ணாடி அறையினுள் பாதுகாக்கப்பட அதனைச்சுற்றி மேல்தளத்தில் நின்று மட்டக்களப்பின் எழிலை இரசிக்கத்தக்க வகையில் இரும்பு வேலியினால் பாதுகாக்கப்பட்ட உப்பரிகையும் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குத் திசை நோக்கியதாக வரிசையாக நான்கு யன்னல்களும், மேற்குத் திசை நோக்கியதாக வரிசையாக ஐந்து யன்னல்களும் ஓர் கதவும் வெளிச்சவீட்டைச் சுற்றி சதுர வடிவான ஆளுயர மதில்சுவரும், வெறுமனே தேவை கருதி மாத்திரம் அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இவை அமைக்கப்பட்டுள்ள நேர்த்தியும் அழகும் இதை வடிவமைத்த கட்டடக்கலைஞரும் அவரது குழுவினரும் எத்தனை கலையார்வம் மிக்கவர்கள் என்பதை காலம் காலமாகப் பறைசாற்றி வருகின்றன. மேலே செல்வதற்காக செங்குத்தாக இரும்பு ஏணிப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அப்படிகளில் ஏறி உச்சியை அடைவது என்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை. எனினும் அவ்வாறு ஏறி உச்சியை அடையும் ஒருவருக்குக் கிடைக்கும் தரிசனமும் - அனுபவமும் நிச்சயம் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பது மட்டும் திண்ணம்.

உலகில் வெளிச்சவீடுகள் பல்வேறு வடிவங்களிலும், உயரங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. பின்லாந்து நாட்டில் மாத்திரம் ஒன்றுக்கொன்று வித்தியாசமான 27 வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன என்று ஒரு தகவல் கூறுகிறது. தேவையும், தரைத்தோற்றமும் இவ் வேறுபாடுகளுக்குக் காரணமாக இருக்கலாம். ஆரம்ப காலங்களில் ஒளியை உற்பத்தி செய்ய எண்ணெய், எரிவாயு, மெழுகு போன்றவை பயன்படுத்தப்பட்டன. இன்று நவீன வெளிச்சவீடுகளில் மின்சாரமே முதன்மை மூலமாகப் பயன்படுத்தப்படுகிறது. பல கடல்மைல் தொலைவுகளுக்கு அப்பால் கரையிலிருந்தபடியே ஆழ்கடலில் பயணிக்கும் கப்பல்களின் மாலுமிகளுக்கு “நீங்கள் இப்பொழுது மட்டக்களப்பின் பக்கமாக செல்கிறீர்கள்” போன்ற செய்திகளையும் “இந்தப் பகுதிக்கு வரவேண்டாம் - ஆபத்து” போன்ற எச்சரிக்கைகளையும் ஓசையின்றி வழங்குவதே வெளிச்சவீட்டின் வேலை. தொலைவிலிருந்தபடியே ஆழ்கடலின் விளம்பரப் பலகைகளாக எவ்வாறு இவற்றால் இச்சாதனையை நிகழ்த்த முடிகிறது?

வெளிச்சவீடுகளில் பொதுவாக வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமான வெளிச்சம் பாவிக்கப்படுகிறது. ஓளி பிறப்பாக்கியினால் உருவாக்கப்படும் ஒளிக்கீற்றுக்கள் பின்னர் கண்ணாடி வில்லைகளினால் சீராக்கப்பட்டு சமாந்தரக் கதிர்களாக மாற்றி ஆழ்கடலை நோக்கி அனுப்பப் படுகின்றன. ஆரம்பகால விளக்குகளில் ஒளிக்கற்றைகள் ஒரே திசையில் வீசப்பட விளக்கு ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரே அச்சினைப் பற்றிச் சுழன்று கொண்டிருக்கும். ஆனால் நவீன விளக்குகளில் அனைத்துத் திசைகளையும் நோக்கியதாக ஒளிக்கதிர்கள் ஒரே நேரத்தில் வீசப்பட்டு அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருக்கும். எவ்வாறு இருப்பினும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிற்கும் மாலுமியைப் பொறுத்தவரையில் வெளிச்சம் குறிப்பிட்ட நேர இடைவெளியில் விட்டு விட்டே தெரியும். கரையில் தெரியும் வெளிச்சத்தின் நிறத்தையும், அணைந்து எரியூம் நேர இடைவெளியையும் அவதானித்துப் பின்னர் அதனைத் தமது கையிலிருக்கும் வரைபடத்தில் ஒப்பிட்டுப் பார்த்தே மாலுமிகள் தாம் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றனர். இதனால் தான் ஒரேவிதமான நிறமும், நேர இடைவெளிகளும் கொண்ட வெளிச்சவீடுகள் அருகருகாக அமைக்கப்படுவதில்லை. தவிர ஒவ்வொரு வெளிச்சவீட்டினதும் தனித்தன்மையைக் குறித்துக் காட்டக்கூடிய கடல் போக்குவரத்து வரைபடங்களும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மட்டக்களப்பு வெளிச்சவீடானது அடுத்தடுத்து இரண்டு பளிச்சிடுதல்கள், (Flash) பின்னர் 20 வினாடிகள் ஓய்வு எனும் வகையில் ஒளிரும் வெள்ளை நிற ஒளியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர வெளிச்சவீட்டுக் கோபுரத்தின் சுவர்களுக்குப் பூசப்படும் நிறமும் மாலுமிகளுக்குப் பல சேதிகளைச் சொல்லக் கூடியவை. மிகவும் ஆபத்தான பாறைகளைக் கொண்ட பிரதேசத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் வரி வரியாக பூசப்படுவதும் உண்டு.




இந்து சமுத்திரத்தில் பயணித்த எண்ணற்ற கப்பல்களுக்கும் உள்ளுர் மீனவர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த இவ்வெளிச்சவீடு 1978ம் ஆண்டு ஏற்பட்ட கடும் சூறாவளியினால் பாதிக்கப்பட்டது. மின்குமிழ்கள் செயலிழந்தும், அதனைப் பாதுகாத்த கண்ணாடி அறை சேதமடைந்தும் போனது. பின்னர் இப்பிரதேசத்தைப் புரட்டிப்போட்ட கொடிய யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் ஆள் நடமாட்டங்களும் அற்றுப் போயின. இதில் பொருத்தப்பட்டிருந்த செம்பினாலான “இடிதாங்கி” கட்டமைப்பில் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டவும் தவறவில்லை. இவற்றுடன் மாத்திரம் இக்கலங்கரை விளக்கை நோக்கிய ஆபத்துக்கள் நின்றுவிடவில்லை.

இந்து சமுத்திரத்தை நோக்கி சுமார் 65 வருடங்கள் தனது ஒளிக்கரங்களை அனுப்பிய இக்கலங்கரை விளக்கை நோக்கி 2004ம் ஆண்டு இந்து சமுத்திரம் தனது அலைக்கரங்களை அனுப்பியது. ஆம் அந்தச் சுனாமி பேரலைகளினால் இத்தூபியை முற்றாக அழிக்க இயலவில்லை தான். ஆனால் மதில்சுவரின் ஒரு பகுதி காணாமல் போனதுடன் தீவிர மண்ணரிப்பினால் கடல்நீருடன் நேரடியாக உறவாடக்கூடிய ஆபத்தை சில அடிகள் தூர வித்தியாசத்தில் எதிர்கொள்ள நேரிட்டது. சுனாமிக்குப் பின்னரான மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பிற்கு வந்த பல்வேறு வெளிநாட்டு மனிதநேயப் பணியாளர்களும் இவ்வெளிச்சவீட்டின் புகைப்படத்தையும் இதன் துர்ப்பாக்கிய நிலையையும் தத்தமது வலைத்தளங்களிலும், இணையக் கட்டுரைகளிலும் குறிப்பிடத் தவறவில்லை. சிலர் இதன் அழகு தொடர்பாக வர்ணித்துள்ள அதே வேளை சிலர் இதன் கேந்திர முக்கியத்துவத்தையும் புனரமைப்பு செய்யவேண்டிய தேவையையும் வலியுறுத்தினர். வெளிநாட்டவர்கள் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்கள் அனைவருமே ஆதங்கப்பட்டு எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் புதுப்பொலிவுடன், புதிய வீச்சுடன் வெளிச்சவீடு இயங்கத் தொடங்கியது!

2008ம் ஆண்டு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தினால் (United States Agency for International Development – USAID) இப் புராதன சின்னத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டு இதனைப் புனரமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கலங்கரை விளக்கின் காலடிவரை வந்து அதன் ஆயுளைக் கேலிசெய்யத் தொடங்கியிருந்த நீரலைகள் கரையான்களாக மாறி அதன் ஆணிவேரை அழித்துவிடாமல் தடுக்கவும், கடல் போக்குவரத்து வழிகாட்டிகள் தரையிலிருந்து விண்ணுக்கும் - அதன் தொழில்நுட்பம் வெளிச்சவீட்டிலிருந்து செய்மதிக்கும் குடிபெயர்ந்துவிட்ட போதிலும் அவையெதுவுமே மட்டக்களப்பு வாழ் மீனவர்களின் வாழ்க்கையில் இன்னமும் அறிமுகப்படுத்தப்படாத நிலையில் அவர்களின் பாதுகாப்பான வீடு திரும்புதலை உறுதிப்படுத்தவும் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வெறுமனே கட்டடங்களைப் புதுப்பித்தலும் விளக்குகளைப் பொருத்துதலும் மாத்திரம் ஒரு வரலாற்றுச் சின்னத்தினை பாதுகாத்துவிடப் போவதில்லை. அதனைச்சுற்றி ஆள்நடமாட்டத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும். அதன் தொன்மை, பாரம்பரியம் போன்றவற்றை இளம் சந்ததியினரிடம் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும். ஊரோடு கோபித்துக் கொண்டதைப்போல் ஒதுங்கியிருக்கும் அக்கட்டடத்தை எமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக ஆக்கவேண்டும். இப்படிச் செய்தால்தான் புராதன சின்னங்களின் பெருமை பேணப்படும் எனும் சிந்தனையின் பின்னணியில் இப்புனரமைப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.


எழில் வழியும் நீர்ப்பரப்புகளையும் கண்டல் காடுகள் மற்றும் தென்னை பனை இனங்களை இயற்கையாகவே கொண்டு ஒடுங்கிய மணல் திடல்களாக அமைந்து உல்லாசப்பயனிகளை வெகுவாகக் கவரக்கூடிதாக அமைந்திருந்ததன் காரணத்தால் இப்பிரதேசம் இன்று வெளிச்சவீட்டுப் பூங்காவாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கில் கூடும் மக்களுக்கு ஓர் சிறந்த பொழுது போக்கிடமாக மாத்திரமன்றி பலரின் ஜீவனோபாயத்திற்கான ஆதாரமாகவும் இன்று இது திகழ்வது மற்றுமொரு சிறப்பம்சமாகும். மழைக்காலத்தைத் தொடர்ந்து மரத்தடியில் சிறிய காளான்கள் முளைப்பதைப் போன்று இப்புனரமைப்பின் பின்னர் இக் கோபுரத்தினடியில் சிறிய கிழங்குக் கடைகளும், குளிர்பான விற்பனையும் இன்னும் பல வியாபாரங்களும், படகுச்சவாரி, பறவைகள் அவதானிப்பு என பல்வேறு வகைக் காளான்கள் தினம் தினம் முளைப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

நீண்டகாலம் ஆழத்திலும் அழுத்தத்திலும் பொறுமை காத்திருந்த நிலக்கரி பின்னர் வைரமாக ஜொலிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த உதாரணம் எமது மட்டக்களப்பு கலங்கரை விளக்கிற்கும் மிகவும் பொருந்தும். பல வருடங்களாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த இக்கலங்கரை விளக்கு இன்று இலங்கையிலேயே அதி நவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஓரேயொரு கலங்கரை விளக்கு எனும் பெருமையைப் பெற்றுள்ளது. “ஒளிகாலும் இருவாயி” (Light-emitting Diode – LED) எனும் மின்குமிழ்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒளிரும் மின்விளக்கே தற்பொழுது பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் குறைவான மின்சாரத்தில் பிரகாசமாக ஒளிரக்கூடிய சிறப்பம்சம் மிக்க இத்தெழில்நுட்பத்துடன் சூரிய சக்தி மூலம் மின் பிறப்பிக்கும் சாதனமும் (Solar Power) சேர்த்து வைக்கப்பட்டிருப்பதனால் கிட்டத்தட்ட இவ்வெளிச்சவீடு தற்பொழுது இலவசமாகவே இயங்குகிறது எனவும் கூறலாம். இருப்பினும் சூரியசக்தி குறைவாகக் கிடைக்கும் மழைக் காலங்களையும் தொழில்நுட்பக் கோளாறுகளையும் கருத்திற்கொண்டு நேரடி மின்சார இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர இரண்டு நாட்களுக்குத் தொடர்ச்சியாக ஒளி வீசத் தேவையான மின்சாரத்தைச் சேமித்து வைத்து வழங்கக்கூடிய மின்கலமும் (Battery) பொருத்தப்பட்டுள்ளது. முதலில் சூரிய சக்தியிலும் அதன் அளவு குறைவடையும் போது நேரடி மின்னிணைப்பிலும் மின்சாரத் தடை ஏற்படுமிடத்து மின்கலத்திலும் தானாக மாறி மாறி இயங்கக்கூடிய வகையில் இக்கருவிகள் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன.















இன்றைய விஞ்ஞான சாதனைகளில் தானியங்கி (Automatic) எனும் சொல்லும் நுட்பமும் தனியிடத்தைப் பிடித்திருக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதானே! சூழலில் ஏற்படும் பௌதீக மாற்றங்களை (Physical Changes) உணர்ந்து அவற்றைக் குறியீடுகளாக (Signals) மற்றும் வல்லமை பொருந்திய ஏராளமான உணர்கருவிகள் (Sensors) பல்வேறு வகையிலும் எமக்கு உதவி புரிகின்றன. எல்லா இடங்களையூம் ஆக்கிரமித்திருக்கும் இக்கருவிகளுக்கு வெளிச்சவீடு மட்டும் என்ன விதிவிலக்கா? இங்கும் சூழலில் காணப்படும் ஒளியின் அளவை உணர்ந்து அதற்கேற்ப செயற்படும் ஒளியுணர்கருவி (Light Sensor) பொருத்தப்பட்டுள்ளதனால் இவ்வெளிச்சவீட்டைப் பராமரிப்பவருக்கு ஒரு வேலை மிச்சம். இரவைக் கண்டவுடன் இவ் வெளிச்சவீடு தானாக ஒளிரும் - சூரியனைக் கண்டால்; தானகவே அணையும். இதனால் மின்சாரத்தின் வீண்விரயம் தவிர்க்கப்படுவதுடன் மீனவர்களுக்கான தடங்கலற்ற வழிகாட்டும் சேவையும் உறுதிப்படுத்தப் படுகிறது. இத்தனை நவீன வசதிகளையும் கொண்டு இயங்கும் இலங்கையின் ஒரேயொரு வெளிச்சவீடு மட்டக்களப்பில் அமைந்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் ஓர் விடயமாகும்.

நம் அனைவருக்கும் மூதாதையர் இருப்பதைப் போல எமது வெளிச்சவீட்டிற்கும் ஓர் மூதாதையர் இருக்கிறார். இவ்வெளிச்சவீட்டிலிருந்து மேலும் வடமேற்குத்திசையில் சுமார் 1.5 கிலோமீற்றர் தூர இடைவெளியில் 25 அடி உயரத்தில் சிவப்பு நிற செங்கற்களை வைத்து சுண்ணாம்பினால் கட்டப்பட்ட ஓர் கோபுரம் போன்ற கட்டமைப்பு காணப்படுகின்றது. இதனை இப்பிரதேசத்தவர்கள் “மொட்டைக்கோரி” என அழைக்கின்றனர். உச்சியில் ஓர் இரும்புப் பாளத்தைத் தாங்கியபடி மிகவும் சிதிலமடைந்து காணப்படும் இச் சின்னத்தைப் பற்றிப் பல்வேறு கதைகள் இப்பிரதேச மக்களிடையே உலவுகின்றன. இது முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத ஒரு வெளிச்சவீடு மாத்திரமே! இதன் கட்டுமான வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு பின்னர் புதிய வெளிச்சவீடு கட்டப்பட்டதாக ஒரு சாரார் கூறுகின்றனர். இன்னும் சிலர் ஆதிகாலத்தில் இதுவே வெளிச்சவீடாகப் பாவிக்கப்பட்டு வந்ததாகவும், பின்னர் இது சேதமடைந்துவிட்ட காரணத்தால் புதிய வெளிச்சவீடு அமைக்கப்பட்டதாகவும்; கூறுகின்றனர். திராய்மடு கிராமத்தில் வசிக்கும் திரு.சதாசிவம் கபிரியல் அல்லது மரியசிங்கம் (வயது 72) என்பவர் 1912 ஆம் ஆண்டில் இம் மொட்டைக்கோரி கட்டி முடிக்கப்பட்டதாகவும், இந்தியாவிலிருந்து மட்டக்களப்பிற்கு சரக்குளை ஏற்றி வரும் கப்பல்களுக்கு வழிகாட்டவே இது அமைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். இதன் உச்சியில் ஓர் சிறிய விளக்கு தினம்தினம் ஏற்றப்பட்டு வந்ததாகவும், புதிய வெளிச்சவீட்டின் கட்டுமானத்தைத் தொடர்ந்து இதன் பயன்பாடு அற்றுப்போய் விட்டதாகவும் சுமார் 50 அடிவரை உயரமாக இருந்த இது முறையான பராமரிப்பு இல்லாததால், இன்று பாதியாகக் குறைந்துவிட்டதாகவும் தனது வருத்தத்தைத் தெரிவிக்கிறார். எது எப்படியோ, மட்டக்களப்பு வெளிச்சவீட்டின் வரலாற்றில் இந்த மொட்டைக்கோரியும் இடம்பிடித்துவிட்டது என்பது மட்டும் உண்மையே!

இத்தனை புகழையும் பெருமையையும் தாங்கி மட்டக்களப்பின் மாண்பினைப் பறைசாற்றும் இக்கலங்கரை விளக்கினைக் கலங்கப்படுத்தும் சில காரணிகளும் இல்லாமல் இல்லை. உயரமான கட்டடங்கள் இடி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாவது ஒரு பொதுவான இயல்பு. அதுவும் கடற்கரை - பாலைவனம் போன்ற வெட்டவெளிப் பரப்புகளில் தனித்து நிற்கும் கோபுரங்கள் இரட்டிப்பு ஆபத்தை எதிர்நோக்கக் கூடும். இத்தனை ஆபத்துக்களின் மத்தியில் இக்கட்டடத்தில் ஓர் இடிதாங்கிக் கட்டமைப்பு இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

இலங்கையில் வெளிச்சவீடுகள் துறைமுகக் கூட்டுத்தாபனத்தினாலேயே நிர்வகிக்கப்படுகின்ற போதிலும், மட்டக்களப்பு வெளிச்சவீடானது கச்சேரியின் நிர்வாகத்தின் கீழேயே காணப்படுகிறது. எனினும் தற்போது இவ்வெளிச்சவீடும் பூங்காவும் மட்டக்களப்பு மாநகரசபையினால் பராமரிக்கப்பட்டு வருவதுடன் இப்பகுதியின் தூய்மையும் அமைதியும் இங்கு வரும் உல்லாசப் பயணிகளால் துளியும் கெட்டுவிடக்கூடாது என்பதில் மாநகர சபை உறுதியாக இருக்கின்றமை குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஓர் விடயமாகும். இருப்பினும் இதில் மாநகரசபையினர் பூரண வெற்றியை அடைந்திருக்கிறார்களா என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பாரிய மரங்களினடியில் பரவலாகக் கிடக்கும் பறவைகளின் எச்சங்கள் போல இவ்வெளிச்சவீட்டின் அடியில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் ஐஸ்கிறீம் உறைகளும் குப்பைகளும் தன் நிலையை எண்ணிக் கலங்கிய இக் கலங்கரை விளக்கு உதிர்த்த கண்ணீர்த்துளிகளோ என எண்ணத் தோன்றுகிறது. வானத்து வெண்ணிலவாக வெளிச்சவீடும் அதன் கீழ் நட்சத்திரங்கள் போல பல மின்வவிளக்குகளும் என மிகவும் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்ந்த இப்பிரதேசத்தில் இன்று பல விளக்குக் கம்பங்கள் மட்டுமே எஞ்சியிருக்க விளக்குகள் காணாமல் போயிருக்கின்றன.

புராதன சின்னங்கள் என்பவை எமது கலாசாரத்தின் அடையாளங்கள். வரலாற்றின் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள். ஒரு பழைய தலைமுறையின் தனித்தன்மையைப் பறைசாற்ற தனித்துநிற்கும் சாட்சியங்கள். அந்தவகையில் எமது வெளிச்சவீடும் அன்றைய மட்டக்களப்பு வாழ்க்கை முறையின் வாக்குமூலமாக இன்று திகழ்கிறது. இதனைப் பேணிக் காக்கவேண்டியதும், இதன் பெருமையை எடுத்தியம்புவதும் நம் அனைவரினதும் கடமையாகிறது. இது ஒன்றும் அத்தனை கடினமான காரியம் அல்ல! இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படத்துடன் சேர்த்து இதன் வரலாற்றையும் கொண்டு செல்லவேண்டும் - அவர்களது காலடித் தடங்களைத் தவிர வேறெதனையும் விட்டுச்செல்லவும் கூடாது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்கள் மாநகரசபையினாலும் ஏனைய அமைப்புகளினாலும் மேற்கொள்ளப்படல் வேண்டும். குறிப்பாக சூழல் மற்றும் தொல்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு நம் அனைவருக்கும் இருக்கவேண்டும்!

இக் கலங்கரை விளக்கின் கரைகளைக் கடலலைகள் சீண்டும் காலம் வரை அந்த ஒளியலைகளும் கடலைச் சீண்டிக்கொண்டே இருக்கட்டும்.

-----------------------------------------
ப.முரளிதரன், கல்லடி, மட்டக்களப்பு.

Friday, February 4, 2011

கண்ணீரில் கரைகிறதா காதல் சின்னம்!

http://www.webcottage.com/about-tajmahal/gifs/taj-mahal-agra-sml.jpg


அந்தோ பரிதாபம்;
காதலி
காட்டாற்று வெள்ளத்தில் - நம்
தாஜ்மஹால்
கரைந்து போவதா ?

என்
முத்தத்தின் சுவடுகள் - உன்
கண்ணீராலேயே
கழுவப்படுவதா ?

காதலி...!
மீண்டும் வா
உறுதியாய் கட்டுவோம்
கன்னங்களில்
தாஜ்மஹால்கள் அல்ல
இதயங்களில் - இருப்பிடங்கள்..
நிரந்தரமாய் !!

ஓசை மட்டும் தமிழருக்கு!

இது 1998ம் ஆண்டு இலங்கையின் 50வது சுதந்திர தினத்தன்று நான் எழுதிய கவிதை. இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாகவே இருக்கிறது. எனவே உங்களுடன் பகிர நினைத்தேன்.

---------()-()-()----------

http://i.colnect.net/images/f/457/067/50-Cents.jpg

நாற்பத்தி எட்டில்

பரிசாக நாம் சில

பொற்காசுகள் பெற்றோம்...

*

வெள்ளைக்காரன் தந்த

சில்லறைக் காசை நாம்

கைகளில் வாங்கவில்லை;

பைகளில் வாங்கினோம்.

*

ஐம்பது வருடங்களாய்

மாற்றி மாற்றி

பையைக் குலுக்கினா்

அரசியல்வாதிகள்.....

*

காசெல்லாம் சிங்களவர்க்கு!
ஓசை மட்டும் தமிழருக்கு!!
-------------

Tuesday, August 3, 2010

வீட்டில் நடக்கும் நகைச்சுவைகள்...

இன்று எனக்கும் என் மனைவிக்குமிடையில் நடந்த ஒரு சுவையான உரையாடல். நான் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் படம் பார்த்ததால் வந்தது. கொஞ்சம் நகைச்சுவையாகவும், கடியாகவும் இருந்ததால் உங்களுடன் பகிர நினைத்தேன்.
---------------------------------------------------------------------------------
(என் மனைவி) நீங்க இப்ப ஒரே படம் பாக்குறீங்க... என்ன காரணம்? 

(நான்) இல்லயே... நான் ஒரே படத்த பார்க்கலயே... வேற வேற படத்த தானே பாக்கிறன்.... 

(என் மனைவி) ஐயோ... ஏன் ஒவ்வொரு நாளும் படம் பாக்கிறீங்க எண்டு கேக்கிறன்... 

(நான்) ஒரே நாள்ல எல்லா படத்தையும் எப்பிடி பாக்கிறது... அடுத்த நாள் வேலைக்குப் போக வேண்டாமா? அதுதான் ஒவ்வொரு நாளும் பாக்கிறன்! 

(என் மனைவி) நான் சொல்லுறது உங்களுக்கு விழங்கலயா? ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு நாளும் பாக்கிறீங்க இப்ப.... 

(நான்) அதுக்கு என்ன இப்ப? ஒரே படத்தை ஒவ்வொரு நாளும் எப்பிடி பார்க்கிறது? 

(என் மனைவி) !#?#"!?? -- நான் சொல்ல வந்தது என்ன எண்டா... இப்ப நீங்க தொடர்ச்சியா படம் பாக்கிறீங்க... 

(நான்) படத்த தொடர்ச்சியா தானே பாக்க வேணும்? விட்டு விட்டு பார்த்தா சரியா விழங்காது.... 

(என் மனைவி) ----------------------?????????????!!!!!!!!!!!!

இதுக்குப் பிறகு என்ன நடந்திருக்கும்???

[] 
\
[] 
 
[] 
 
[] 

[] 
 
[] 

 [] 

 [] 

 [] 

 [] 

 [] 

 [] 

 [] 

[]

[]

]

Saturday, February 13, 2010

பட்ட மரங்களும் ஓர் பட்டதாரியும்!

பட்டம் பெற்றபின் வேலை வேண்டி
உண்ணாவிரதம் இருப்பது எத்தனை
கொடுமையானது..........
அடிக்கடி அப்படியொரு நிலைக்கு ஆளாகும் - எமது
சகோதரர்களின் குரலாக - என் இதயத்தைக்
கசக்கும் அந்த நிகழ்வுகள்; இதோ.......


-------------------------
நான் ஒரு பட்டதாரி.
வாழ்க்கைப் பாதையில்
ஓரமாய் நடந்தும்
அனுபவ வாகனங்களில்
அடிபட்டவன்.

மானுடத்தைத் தின்று
மனிதனைத் துப்பும்
பல்கலைக் கழகத்தில்
வெளிப்பட்டவன்.

மரத்திலேறி
கனிபறிப்பதை விடுத்து
பட்டம் விட்டு நிலவைத் தொட
புறப்பட்டவன்.

வேலை தேடுவதே
வேலையாகிப் போன
வேதனைத் தீயில்
வதைபட்டவன்.

எனவே நான் ஒரு பட்டதாரிதான்!

அன்று
உண்ணாமல் உறங்காமல்
படித்தேன்..
பட்டம் பெற!
இன்று
உண்ணாவிரதம் இருக்கிறேன்
வேலைபெற!!

நான் ஒரு பட்டதாரி!

உண்ணாவிரதம் ஒன்றும்
அவ்வளவு சிரமமாயில்லை.....

வேலையற்ற எனக்கு
தினமும் உண்ணாவிரதம் தான்.
நேற்றுவரை வீட்டில்!
இன்று முதல் வீதியில்!!

உண்ணாவிரதம் ஒன்றும்
அவ்வளவு சிரமமாயில்லை.....

இதோ..
மெல்ல மெல்ல
குறைகிறது.
என் உடல் வலிமை மட்டுமல்ல
வேலை கிடைக்குமென்ற - என்
கனவின் கனமும் தான்.

நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!

அரசியல்வாதிகளே...! - இங்கு
உண்ணாமல் இருப்பது
உங்கள் வோட்டுக்கள்தான்.

பெற்ற மனங்களே...! - இங்கு
உறங்காமல் கிடப்பது
உங்கள் உதிரங்கள்தான்.

பஞ்ச பூதங்களே...! - இங்கு
உணர்வின்றிப் படுப்பது
உங்கள் உறுப்புகள் தான்.

நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!

என் முதற் சம்பளம்
வாங்கும் நாள்வரை
மருந்தின் துணையுடன்
உயிரைத்தாங்கும்
என் அம்மா....................

தமயன்வழிச் சீதனமாய்
ஒரு தாவணியாவது கொண்டுசெல்ல
பிறந்த வீட்டிலேயே காத்திருக்கும்
வயது வந்த
என் தங்கை...............

வெறுமையே நிறைந்தாலும்
இளமையே கரைந்தாலும்
வேலை கிடைக்கும்
நாள்வரையாவது
வாழ நினைக்கும்
என் காதலி........

இவர்களுடன்
கைகோர்த்தபடி - காத்திருக்கின்றன
என்
கனவுகளும் இலட்சியங்களும்!

என்ன செய்வேன் நான்?
நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!

கண்கள் மயங்கி
உணர்வுகள் அடங்கி
துவண்டு விழும்
என் தலையைத் - தாங்க
நிச்சயம் நீழும்
இன்னுமொரு
வேலையில்லாப் பட்டதாரியின்
வேதனைக் கரங்கள்.

நாளை
அவனைத் தாங்கவும்
இன்னும் சில கரங்கள்..

அந்த வகையில் கவலையில்லை!

உண்ணாவிரதிகளை
உற்பத்தி பண்ணத்தான்
இருக்கிறதே
பல்கலைக்கழகமெனும்
பல தொழிற்சாலைகள்!

இதோ என் இறுதிச் சிரிப்பு.
இதோ என் கடைசி ஏக்கம்.
என் இறுதிப் பார்வை..
என் கடைசிக் கவிதை..

விடைபெறுகிறேன் நான்.

என் வாழ்வின்
எல்லைக்கோடுவரை - வந்த
அம்மாவின் அன்பு முகம்
தங்கையின் பாசம்
காதலியின் உதடு
நண்பர்களின் இதயம்
இன்னும்
கவிதைகள்
கனவுகள்
இலட்சியங்களுடன்
விடைபெறுகிறேன் நான்.

நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!!

------------------(c) விவிக்தா 2003 ----------------

Friday, February 12, 2010

தியாகங்களே சில தீர்வுகள்

அது காதல் வானில் சிறகடித்துப் பறந்த
ஒரு வானம் பாடியின் வாலிப மனசு...!
இது சேற்றில் சிக்கித் தடுமாறும் ஒரு
நீர்ப் பறவையின் நடுத்தர வயசு..!!

வணக்கம்!

“தியாகங்களே சில தீர்வுகள்” - 2000 ஆம் ஆண்டு, காதலர்தினத்தில் நான் எழுதிய ஓர் சிறுகதை. பிரிந்து போன காதலர்கள் பத்து வருடங்களின் பின்னர் சந்தித்துக்கொள்வதாய் ஓர் கற்பனை. இதில் வரும் கதாபாத்திரம் நானேதான்! இதில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே. எனினும் பத்துவருடங்களின் முன் நான் கற்பனை செய்த முடிவை சரியாக பத்து வருடங்களின் பின்னர் இந்த 2010 காதலர்தினத்தில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமாக தெரிகிறது. “எந்தக்காயத்தையும் காலம் ஆற்றிவிடும்” என்பது எத்தனை நிதர்சனமான கூற்று...

இன்று காதல் வானில் சிறகடித்துப் பறக்கின்ற அத்தனை வாலிப மனங்களுக்கும் இக்கதை சமர்ப்பணம்!
------------------------------------------



முறு".... முறுதானே......!

ச.... 'சவ்வு".... நீயா? நல்லா இருக்கிறியா?

ஏதோ இருக்கிறன். நீ எப்பிடி?

இன்னும் உயிரோடதான் இருக்கிறன்.

பழச மறக்கலயா நீ.....!

காதல் என்பது கல்லுல செதுக்கின கோடு மாதிரி. கல்லு உடையலாம்.. ஆனா கோடு அழியாது!

என்ன.. ஒரு பத்து வருஷத்க்குப் பிறகு மீண்டும் மலரும் நினைவுகளா?

அப்ப நீ பழச எல்லாம் மறந்திட்டியா..?

இல்ல.. மறக்கல்ல. ஆனா உன்னமாதிரி வெளிப்படையா கதைக்க இப்ப எண்ட நிலையும் சூழலும் இடம் தராது.

விளங்குது.

நீ தான் கடவுள் எல்லாம் இல்ல எண்டு சொல்லுவியே..... இப்ப என்ன இந்த தேவாலயத்தில......

என்ன செய்ய 'சவ்வு".... வாழ்க்கைல மனிதர்கள நம்பி ஏமாந்த பிறகுதானே கடவுள் மேல நம்பிக்கை வருது.

நான் உன்ன மட்டும் ஏமாத்தல, என்னையும் நானே ஏமாத்திட்டனோ எண்டு இப்ப நினைக்கிறன்.

உன்ன நினைச்சு நான் அப்பிடி சொல்லல.. சும்மா பொதுவாத்தான் சொல்றன்.

ஆனா எனக்கும் மனசாட்சி இருக்கு தானே! காதலிக்கும் போதே உன்ன ஏமாத்திட்டு துறவியாப் போறதும் ஒரு வகையான துரோகம் தானே....?

ஏதோ இப்ப நீ புனிதமான ஒரு துறைல பொறுப்பு வாய்ந்த துறவி. நீ 'சிஸ்டராப்" போய் ஒரு பத்து வருஷம் இருக்குமா?

ம்.... என்ன செய்ய 'முறு"... அந்த வயசில உன்ன மறக்கவும் முடியல, வீட்டு ஆக்கள எதிர்க்கவும் துணிவில்ல.

உண்மைதான்.. உன் கருணை நிறைந்த உள்ளம் எனக்குக் கிடைக்காமப் போனாலும் இப்ப அது பலருக்குப் பயன்படுதே அது நல்லது தானே.

நீ அடிக்கடி இந்தக் கோயிலுக்கு வருவியா?

ஒவ்வாரு வாரமும் வருவன். ஆனா உன்ன சந்திக்கிறதில்லையே......

நான் போன கிழமைல இருந்துதான் இங்க இருக்கிறன். இப்பிடி உன்ன சந்திப்பன் எண்டு எதிர்பார்க்கல.

சந்திச்சதில ஏதாவது வருத்தமா?

சரியா சொல்லத் தெரியல்ல. நீ எப்பிடி..? திருமணம் முடிஞ்சா..? எத்தன பிள்ளைகள்..?

சவ்வு.... உன் வாழ்க்கை பார்த்த உடனே எப்பிடி எண்டு தெரியுது! எண்ட வாழ்க்க அப்பிடி இல்ல. ஆனா நாம ரெண்டு பேரும் ஒரே தோணிலதான்.

என்ன... நீ இன்னும் திருமணம் முடிக்கலயா? ஏன்?

'நான் தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹான் இல்ல: தடுக்கி விழுந்த ஷாஜஹான்"

ஏன் உனக்கு வேற 'மும்தாஜ்" கிடைக்கலயா?

அப்பிடி இல்ல,, வேற மும்தாஜ நான் நினைக்கல.

ஏன் அப்பிடி?

இது என்ன கேள்வி சவ்வு? 'எல்லாப் பூக்களும் காயாக மாறினால் உலகம் தாங்காது... சில மரங்கள் ஒரு தடவைக்குமேல் பூக்காது".

பூவையும் மரத்தையும் விடு, படிப்பெல்லாம் எப்பிடி? அந்தப்பூவாவது நல்லா வாசம் வீசுதா?

அத ஏன் கொஞ்சம் சந்தேகமாக் கேக்கிறா...?

இல்ல.. உன்னப்பற்றிய பழைய ஞாபகங்கள் சொல்லுது நீ ஒரு நல்ல நிலையில இருப்பா எண்டு. ஆனா.....

என்ன ஆனா.....

உன்... உன்.... தோற்றம் அப்பிடிச் சொல்லல...!

நாங்க என்ன பிறந்த உடனேயா படிக்கத் தொடங்கினம்?

அதுக்கு....!?

அதுதான் இடைல தொடங்கின படிப்ப இடையிலேயே விட்டுட்டன்.

படிப்ப - இடைல - விட்டுட்டியா? அத இவ்வளவு சிம்பிளா சொல்லுறியா?

உண்மைய எப்பிடி சொன்னா என்ன?

சரி விடு, ஏதோ முப்பது வயசுக்குள்ள கார் வாங்கோணும், வீடு கட்டோணும் எண்டெல்லாம் இலட்சியம் வச்சிருந்தியே... அதையாவது செய்தியா?

இந்தக் கோயில் நல்ல அமைதியான சூழல்ல அமைஞ்சிருக்கு இல்லையா?

கதைய மாத்தாத. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு. செய்தியா?

இப்ப எனக்கு 35 வயசு சவ்வு. வாடகை ரூம்ல இருந்து நடந்துதான் இங்க வந்தன்.

எ...எப்பிடி இருந்திருக்கவேண்டியவன் நீ... எல்லாம் என்னாலதான்..!

ஏய் என்ன அழுறியா?

இல்ல...

அப்ப இந்தப்பக்கம் திரும்பு. முதல்ல கண்ணத் துட..

உன்ன நினைக்க எனக்குக் கவலையா இருக்கு முறு!

நீ இப்பிடி கவலைப்படுறதப் பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கு சவ்வு!!

சரியான கல்லு மனம் உனக்கு.

வாழ்க்கைல எதிர்பாராத இடிகளைத் தாங்கிக்கொள்ள அதுதான் வசதியானது.

ஏன் ஒருமாதிரி விரக்தியாக் கதைக்கிறா...? இப்ப உனக்கு வாழ்க்கைல எந்த இலட்சியமும் இல்லையா?

யார் சொன்னது..? இலட்சியம் இல்லாம ஒரு வாழ்க்கையா? இப்பகூட நான் ஒரு இலட்சியத்தோடதான் வாழுறன். இதுவும் காதல் மாதிரி ஒரு உயர்ந்த இலட்சியம் தான்.

அப்பிடியா? என்ன இலட்சியம் அது?

எல்லா விஷயங்களையும் வெளில சொல்லமுடியாது சவ்வு.

உன்னில இப்ப நிறைய மாற்றம் தெரியுது. முந்தியெல்லாம் நீ எதையுமே வெளிப்படையாத்தான் கதைப்பா.

'அது காதல் வானில் சிறகடித்துப் பறந்த ஒரு வானம்பாடியின் வாலிப மனசு. இது சேற்றில் சிக்கித் தடுமாறும் ஒரு நீர்ப்பறவையின் நடுத்தர வயசு"

நான் கூட இப்ப ஒரு இலட்சியம் வச்சிருக்கிறன்.

என்ன? சாகும் வரைக்கும் உயிரோட இருக்கப்போறியா?

பார்த்தியா உன் 'கடி" குணம் இன்னும் மாறல 'முறு".

நீ கூடத்தான் என்ன அப்பிடிக் கூப்பிடுறத இன்னும் மறக்கல போல...

உண்மைதான். இனி நான் உன்ன அப்பிடிக் கூப்பிடல. ஆனா நீ மட்டும் என்ன சவ்வு எண்டு கூப்பிடலாமா?

துறவியாப் போனது நீ தான். நான் இல்ல.

அதுவும் சரிதான்.

ஏதோ ஒரு மன நிம்மதிக்காகதத்தான் இந்தக் கோயிலுக்கு வருவன். இனி நான் இங்க வரமாட்டன்.

நான் உண்ட வாழ்க்கைல குறுக்கிடுற ஒவ்வொரு தடவையும் நீ ஏதோ ஒன்றை இழக்கிறா இல்லையா முறு.......!! சொறி.. இனி இப்பிடி கூப்பிட மாட்டன்.

என்ன... சென்டிமென்டா?

உனக்கு என்னில கொஞ்சம் கூட கோபம் இல்லையா?

ஒரு சின்னத் துளி கூட இல்ல.

ஏன்?

நாங்க திருமணம் முடிச்சிருந்தா, என் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல அன்னை கிடைச்சிருக்கும். ஆனா உலகம் ஒரு அருமையான சகோதரியை இழந்திருக்கும். உண்மையைச் சொல்லப் போனால் உன்னமாதிரி நல்ல உள்ளம் கொண்டவர்கள் 'சிஸ்டராப்" போறதாலதான் அந்தப் புனிதம் இன்னும் கெடாம இருக்கு.

மிகவும் நன்றி.

எதுக்கு?

நாங்க என்னதான் ஒரு புரிந்துணர்வோட பிரிஞ்சிருந்தாலும், இவ்வளவு காலமும் மனசில ஒரு சின்ன உறுத்தல் இருந்திச்சி.

இனி எந்த உறுத்தலும் இல்லாம நீ உன் சேவையைத் தொடரலாம். எங்கட கடைசிச் சந்திப்பு இதுவாத்தான் இருக்கும்.

நான் உன்ன அடுத்த தடவை சத்திக்கும்போது இந்தத் தாடியெல்லாம் எடுத்து, தலை முடியெல்லாம் வெட்டி மனுஷன் மாதிரி இருக்கோனும். சரியா?

அதுக்கு அவசியமில்ல சவ்வு.

ஏன்?

நாளைக்குக் காலைல உனக்கு எல்லாம் விழங்கும்.

அப்பிடி என்ன புதிர்..?

ஒரு பத்துப் பன்னிரண்டு மணி நேரம் பொறுமையில்லையா..?

என்ன மணிக்கூட்டப் பார்க்கிறா... போகப்போறியா..?

ம்... நான் போகவேண்டிய நேரம் வந்திட்டு சவ்வு! இப்ப நான் ஒரு வேலையாப் போறன். அதுல நான் முழு வெற்றி அடையவேணும் எண்டு வாழ்த்தமாட்டியா?

கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக!

குட்பை சவ்வு !!

குட்பை!!!

(உடலோடு பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டைத் தடவிப் பார்த்தபடியே தனது இலக்கு நோக்கிப் புறப்பட்டான் அந்தத் தற்கொலைப்படைப் போராளி)

----------- (C) விவிக்தா - 14 Feb 2000 -------------