Tuesday, October 18, 2011

மக்கள் மனங்களிலும் ஒளிவீசும் மட்டக்களப்பு கலங்கரை விளக்கு!




மட்டக்களப்பில் வாழும் ஒவ்வொருவருக்கும் முகத்துவாரம் என்ற சொல்லைக் கேட்டவுடன் ஒரு வெளிச்சவீடும், வெளிச்சவீடு என்று கூறும் போதெல்லாம் முகத்துவாரம் எனும் பெயரும் நினைவில் வந்தே தீரும். இந்து சமுத்திரத்தின் கிழக்குக் கரைவழியே இலங்கைத் தீவின் பெருமைமிக்க நிலப்பரப்புகளினின்று தனது ஒளிக்கரங்களை நீட்டி அவ்வழியே பயணிக்கும் கப்பல்களை கிச்சு கிச்சு மூட்டியூம், எச்சரிக்கை செய்தும் உறவாடிய - உறவாடும் ஆறு வெளிச்சவீடுகள் வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றன. அவற்றில் தனது புவியியல் அமைவிடத்தின் (Geographical Location) காரணமாக மட்டக்களப்பு வெளிச்சவீடு தனித்தன்மை பெறுகிறது.









வானத்து நீலத்தை தரைக்கு இடம்பெயர்த்தபடி – ஓர் இராட்சதக் கண்ணாடியை நிலத்தில் விரித்தது போல மட்டுநகரெங்கும் பரவிக்கிடக்கும் கடல்நீரேரி மற்றும் உலகின் மூன்றாவது பெரியதும், அழகியதுமான இந்து சமுத்திரம் என்பன சந்தித்துக்கொள்ளும் புள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இக் கலங்கரை விளக்கு மட்டக்களப்பின் மற்றுமொரு அடையாளம் ஆகும்.

மட்டக்களப்பின் இதயப்பகுதியாகிய புளியந்தீவிலிருந்து வடக்குத்திசையில் மட்டக்களப்பு பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்து 5 – 6 கிலோமீற்றர்கள் தொலைவில் இது அமைந்துள்ளது. மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகிலிருந்து வாகனத்தில் பயணிக்கும் ஒருவர் சராசரியாக 15 நிமிடங்களில் இதனை அடைய முடியும். மட்டக்களப்பு “பார் வீதியில்” சுமார் 3 கிலோமீற்றர்கள் வரை பயணிக்கும் போது எதிர்ப்படும் கடல்நீரேரியுடன் அவ்வீதி முடிவடைந்துவிட்டது போன்று தென்படும். அந்தப் புள்ளியில் எமது முகங்களில் வந்து மோதும் கடல்காற்றின் சுகானுபவத்தை பெற்றுக்கொண்டு இடப்பக்கமாகச் செல்லும் வீதியில் மேலும் இரண்டு கிலோமீற்றர்கள் பயணிக்கும் போது பாலமீன்மடு எனும் அழகிய கிராமம் எதிர்ப்படும். அங்கிருந்து வலப்பக்கமாகத் திரும்பி சுமார் 500 மீற்றர்கள் வரை சென்றால் அங்கு ஓர் அழகிய அலங்கார வளைவு உங்களை வரவேற்கும்.

நீல வானத்தை ஊடறுக்கும் வெளிச்சவீடும், வெளிச்சவீட்டை மையங்கொண்ட பொழுதுபோக்குப் பூங்காவும், பூங்காவின் தடுப்புச் சுவரில் வந்து மோதும் நீரலைகளும், நீரலைகளின் தாளத்திற்கேற்ப நடனமாடும் தோணிகளும், தோணிகள் புகமுடிகாதபடி அடர்ந்து வளர்ந்த கண்டல் காடுகளும், கண்டல் காடுகளில் வாசம்செய்யும் பறவையினங்களும், பறவைகள் சிறகடிக்கும் நீல வானமும் என இப்பிரதேசத்தின் அழகை வார்த்தைகளால் விபரிக்க இயலாது.

வெளிச்சவீடு எனும் எண்ணக்கரு உருவாக்கப்பட்ட நோக்கம் இன்றைய விஞ்ஞான சாதனைகளாலும் சாதனங்களாலும் வெற்றிகொள்ளப்பட்ட நிலையில் உலகில் பல இடங்களிலும் வெளிச்சவீடுகள் இன்று இருட்டு வீடுகளாகவும் வெளவால்களின் குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன. எனினும் மட்டக்களப்பு வெளிச்சவீடானது இன்றும் மங்காப் புகழுடன் புதுப் பொலிவுடன் காட்சி தருவதற்குக் காரணம் அது தனது ஒளிவீச்சை கடலை நோக்கி மட்டுமல்ல – மக்களின் மனங்களை நோக்கியும் செலுத்தியிருக்கிறது போலும் எனக்கூறினால் அதில் தவறேதும் இல்லை. இன்று பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் இக்கலங்கரை விளக்கின் மேனியில் காலமும் இயற்கையும் வரைந்த கோடுகள் ஏராளம். அந்தத் தழும்புகளையெல்லாம் மறைத்தபடி கம்பீரமாகக் காட்சி தரும் இக் கோபுரத்தைப் பற்றியும் இதன் தனித்தன்மை பற்றியும் சற்று விரிவாக பார்ப்போம்.


1913ம் ஆண்டு பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில் 27 மீற்றர் (89 அடி) உயரமும் கீழ்ப் பகுதியில் கனசதுர வடிவாக (Cube) ஆரம்பித்து பின்னர் உறுளை வடிவாகச் சென்று உச்சியில் ஓர் மகுடத்தைத் தாங்கியது போன்றதாகவும் இது அமைக்கப்பட்டது. இதன் மகுடத்தினுள் ஒளி முதலும்இ கண்ணாடி வில்லையூம் (Light Source and Lens) ஓர் அழகிய கண்ணாடி அறையினுள் பாதுகாக்கப்பட அதனைச்சுற்றி மேல்தளத்தில் நின்று மட்டக்களப்பின் எழிலை இரசிக்கத்தக்க வகையில் இரும்பு வேலியினால் பாதுகாக்கப்பட்ட உப்பரிகையும் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குத் திசை நோக்கியதாக வரிசையாக நான்கு யன்னல்களும், மேற்குத் திசை நோக்கியதாக வரிசையாக ஐந்து யன்னல்களும் ஓர் கதவும் வெளிச்சவீட்டைச் சுற்றி சதுர வடிவான ஆளுயர மதில்சுவரும், வெறுமனே தேவை கருதி மாத்திரம் அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இவை அமைக்கப்பட்டுள்ள நேர்த்தியும் அழகும் இதை வடிவமைத்த கட்டடக்கலைஞரும் அவரது குழுவினரும் எத்தனை கலையார்வம் மிக்கவர்கள் என்பதை காலம் காலமாகப் பறைசாற்றி வருகின்றன. மேலே செல்வதற்காக செங்குத்தாக இரும்பு ஏணிப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அப்படிகளில் ஏறி உச்சியை அடைவது என்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை. எனினும் அவ்வாறு ஏறி உச்சியை அடையும் ஒருவருக்குக் கிடைக்கும் தரிசனமும் - அனுபவமும் நிச்சயம் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பது மட்டும் திண்ணம்.

உலகில் வெளிச்சவீடுகள் பல்வேறு வடிவங்களிலும், உயரங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. பின்லாந்து நாட்டில் மாத்திரம் ஒன்றுக்கொன்று வித்தியாசமான 27 வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன என்று ஒரு தகவல் கூறுகிறது. தேவையும், தரைத்தோற்றமும் இவ் வேறுபாடுகளுக்குக் காரணமாக இருக்கலாம். ஆரம்ப காலங்களில் ஒளியை உற்பத்தி செய்ய எண்ணெய், எரிவாயு, மெழுகு போன்றவை பயன்படுத்தப்பட்டன. இன்று நவீன வெளிச்சவீடுகளில் மின்சாரமே முதன்மை மூலமாகப் பயன்படுத்தப்படுகிறது. பல கடல்மைல் தொலைவுகளுக்கு அப்பால் கரையிலிருந்தபடியே ஆழ்கடலில் பயணிக்கும் கப்பல்களின் மாலுமிகளுக்கு “நீங்கள் இப்பொழுது மட்டக்களப்பின் பக்கமாக செல்கிறீர்கள்” போன்ற செய்திகளையும் “இந்தப் பகுதிக்கு வரவேண்டாம் - ஆபத்து” போன்ற எச்சரிக்கைகளையும் ஓசையின்றி வழங்குவதே வெளிச்சவீட்டின் வேலை. தொலைவிலிருந்தபடியே ஆழ்கடலின் விளம்பரப் பலகைகளாக எவ்வாறு இவற்றால் இச்சாதனையை நிகழ்த்த முடிகிறது?

வெளிச்சவீடுகளில் பொதுவாக வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமான வெளிச்சம் பாவிக்கப்படுகிறது. ஓளி பிறப்பாக்கியினால் உருவாக்கப்படும் ஒளிக்கீற்றுக்கள் பின்னர் கண்ணாடி வில்லைகளினால் சீராக்கப்பட்டு சமாந்தரக் கதிர்களாக மாற்றி ஆழ்கடலை நோக்கி அனுப்பப் படுகின்றன. ஆரம்பகால விளக்குகளில் ஒளிக்கற்றைகள் ஒரே திசையில் வீசப்பட விளக்கு ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரே அச்சினைப் பற்றிச் சுழன்று கொண்டிருக்கும். ஆனால் நவீன விளக்குகளில் அனைத்துத் திசைகளையும் நோக்கியதாக ஒளிக்கதிர்கள் ஒரே நேரத்தில் வீசப்பட்டு அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருக்கும். எவ்வாறு இருப்பினும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிற்கும் மாலுமியைப் பொறுத்தவரையில் வெளிச்சம் குறிப்பிட்ட நேர இடைவெளியில் விட்டு விட்டே தெரியும். கரையில் தெரியும் வெளிச்சத்தின் நிறத்தையும், அணைந்து எரியூம் நேர இடைவெளியையும் அவதானித்துப் பின்னர் அதனைத் தமது கையிலிருக்கும் வரைபடத்தில் ஒப்பிட்டுப் பார்த்தே மாலுமிகள் தாம் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றனர். இதனால் தான் ஒரேவிதமான நிறமும், நேர இடைவெளிகளும் கொண்ட வெளிச்சவீடுகள் அருகருகாக அமைக்கப்படுவதில்லை. தவிர ஒவ்வொரு வெளிச்சவீட்டினதும் தனித்தன்மையைக் குறித்துக் காட்டக்கூடிய கடல் போக்குவரத்து வரைபடங்களும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மட்டக்களப்பு வெளிச்சவீடானது அடுத்தடுத்து இரண்டு பளிச்சிடுதல்கள், (Flash) பின்னர் 20 வினாடிகள் ஓய்வு எனும் வகையில் ஒளிரும் வெள்ளை நிற ஒளியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர வெளிச்சவீட்டுக் கோபுரத்தின் சுவர்களுக்குப் பூசப்படும் நிறமும் மாலுமிகளுக்குப் பல சேதிகளைச் சொல்லக் கூடியவை. மிகவும் ஆபத்தான பாறைகளைக் கொண்ட பிரதேசத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் வரி வரியாக பூசப்படுவதும் உண்டு.




இந்து சமுத்திரத்தில் பயணித்த எண்ணற்ற கப்பல்களுக்கும் உள்ளுர் மீனவர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த இவ்வெளிச்சவீடு 1978ம் ஆண்டு ஏற்பட்ட கடும் சூறாவளியினால் பாதிக்கப்பட்டது. மின்குமிழ்கள் செயலிழந்தும், அதனைப் பாதுகாத்த கண்ணாடி அறை சேதமடைந்தும் போனது. பின்னர் இப்பிரதேசத்தைப் புரட்டிப்போட்ட கொடிய யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் ஆள் நடமாட்டங்களும் அற்றுப் போயின. இதில் பொருத்தப்பட்டிருந்த செம்பினாலான “இடிதாங்கி” கட்டமைப்பில் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டவும் தவறவில்லை. இவற்றுடன் மாத்திரம் இக்கலங்கரை விளக்கை நோக்கிய ஆபத்துக்கள் நின்றுவிடவில்லை.

இந்து சமுத்திரத்தை நோக்கி சுமார் 65 வருடங்கள் தனது ஒளிக்கரங்களை அனுப்பிய இக்கலங்கரை விளக்கை நோக்கி 2004ம் ஆண்டு இந்து சமுத்திரம் தனது அலைக்கரங்களை அனுப்பியது. ஆம் அந்தச் சுனாமி பேரலைகளினால் இத்தூபியை முற்றாக அழிக்க இயலவில்லை தான். ஆனால் மதில்சுவரின் ஒரு பகுதி காணாமல் போனதுடன் தீவிர மண்ணரிப்பினால் கடல்நீருடன் நேரடியாக உறவாடக்கூடிய ஆபத்தை சில அடிகள் தூர வித்தியாசத்தில் எதிர்கொள்ள நேரிட்டது. சுனாமிக்குப் பின்னரான மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பிற்கு வந்த பல்வேறு வெளிநாட்டு மனிதநேயப் பணியாளர்களும் இவ்வெளிச்சவீட்டின் புகைப்படத்தையும் இதன் துர்ப்பாக்கிய நிலையையும் தத்தமது வலைத்தளங்களிலும், இணையக் கட்டுரைகளிலும் குறிப்பிடத் தவறவில்லை. சிலர் இதன் அழகு தொடர்பாக வர்ணித்துள்ள அதே வேளை சிலர் இதன் கேந்திர முக்கியத்துவத்தையும் புனரமைப்பு செய்யவேண்டிய தேவையையும் வலியுறுத்தினர். வெளிநாட்டவர்கள் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்கள் அனைவருமே ஆதங்கப்பட்டு எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் புதுப்பொலிவுடன், புதிய வீச்சுடன் வெளிச்சவீடு இயங்கத் தொடங்கியது!

2008ம் ஆண்டு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தினால் (United States Agency for International Development – USAID) இப் புராதன சின்னத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டு இதனைப் புனரமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கலங்கரை விளக்கின் காலடிவரை வந்து அதன் ஆயுளைக் கேலிசெய்யத் தொடங்கியிருந்த நீரலைகள் கரையான்களாக மாறி அதன் ஆணிவேரை அழித்துவிடாமல் தடுக்கவும், கடல் போக்குவரத்து வழிகாட்டிகள் தரையிலிருந்து விண்ணுக்கும் - அதன் தொழில்நுட்பம் வெளிச்சவீட்டிலிருந்து செய்மதிக்கும் குடிபெயர்ந்துவிட்ட போதிலும் அவையெதுவுமே மட்டக்களப்பு வாழ் மீனவர்களின் வாழ்க்கையில் இன்னமும் அறிமுகப்படுத்தப்படாத நிலையில் அவர்களின் பாதுகாப்பான வீடு திரும்புதலை உறுதிப்படுத்தவும் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வெறுமனே கட்டடங்களைப் புதுப்பித்தலும் விளக்குகளைப் பொருத்துதலும் மாத்திரம் ஒரு வரலாற்றுச் சின்னத்தினை பாதுகாத்துவிடப் போவதில்லை. அதனைச்சுற்றி ஆள்நடமாட்டத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும். அதன் தொன்மை, பாரம்பரியம் போன்றவற்றை இளம் சந்ததியினரிடம் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும். ஊரோடு கோபித்துக் கொண்டதைப்போல் ஒதுங்கியிருக்கும் அக்கட்டடத்தை எமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக ஆக்கவேண்டும். இப்படிச் செய்தால்தான் புராதன சின்னங்களின் பெருமை பேணப்படும் எனும் சிந்தனையின் பின்னணியில் இப்புனரமைப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.


எழில் வழியும் நீர்ப்பரப்புகளையும் கண்டல் காடுகள் மற்றும் தென்னை பனை இனங்களை இயற்கையாகவே கொண்டு ஒடுங்கிய மணல் திடல்களாக அமைந்து உல்லாசப்பயனிகளை வெகுவாகக் கவரக்கூடிதாக அமைந்திருந்ததன் காரணத்தால் இப்பிரதேசம் இன்று வெளிச்சவீட்டுப் பூங்காவாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கில் கூடும் மக்களுக்கு ஓர் சிறந்த பொழுது போக்கிடமாக மாத்திரமன்றி பலரின் ஜீவனோபாயத்திற்கான ஆதாரமாகவும் இன்று இது திகழ்வது மற்றுமொரு சிறப்பம்சமாகும். மழைக்காலத்தைத் தொடர்ந்து மரத்தடியில் சிறிய காளான்கள் முளைப்பதைப் போன்று இப்புனரமைப்பின் பின்னர் இக் கோபுரத்தினடியில் சிறிய கிழங்குக் கடைகளும், குளிர்பான விற்பனையும் இன்னும் பல வியாபாரங்களும், படகுச்சவாரி, பறவைகள் அவதானிப்பு என பல்வேறு வகைக் காளான்கள் தினம் தினம் முளைப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

நீண்டகாலம் ஆழத்திலும் அழுத்தத்திலும் பொறுமை காத்திருந்த நிலக்கரி பின்னர் வைரமாக ஜொலிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த உதாரணம் எமது மட்டக்களப்பு கலங்கரை விளக்கிற்கும் மிகவும் பொருந்தும். பல வருடங்களாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த இக்கலங்கரை விளக்கு இன்று இலங்கையிலேயே அதி நவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஓரேயொரு கலங்கரை விளக்கு எனும் பெருமையைப் பெற்றுள்ளது. “ஒளிகாலும் இருவாயி” (Light-emitting Diode – LED) எனும் மின்குமிழ்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒளிரும் மின்விளக்கே தற்பொழுது பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் குறைவான மின்சாரத்தில் பிரகாசமாக ஒளிரக்கூடிய சிறப்பம்சம் மிக்க இத்தெழில்நுட்பத்துடன் சூரிய சக்தி மூலம் மின் பிறப்பிக்கும் சாதனமும் (Solar Power) சேர்த்து வைக்கப்பட்டிருப்பதனால் கிட்டத்தட்ட இவ்வெளிச்சவீடு தற்பொழுது இலவசமாகவே இயங்குகிறது எனவும் கூறலாம். இருப்பினும் சூரியசக்தி குறைவாகக் கிடைக்கும் மழைக் காலங்களையும் தொழில்நுட்பக் கோளாறுகளையும் கருத்திற்கொண்டு நேரடி மின்சார இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர இரண்டு நாட்களுக்குத் தொடர்ச்சியாக ஒளி வீசத் தேவையான மின்சாரத்தைச் சேமித்து வைத்து வழங்கக்கூடிய மின்கலமும் (Battery) பொருத்தப்பட்டுள்ளது. முதலில் சூரிய சக்தியிலும் அதன் அளவு குறைவடையும் போது நேரடி மின்னிணைப்பிலும் மின்சாரத் தடை ஏற்படுமிடத்து மின்கலத்திலும் தானாக மாறி மாறி இயங்கக்கூடிய வகையில் இக்கருவிகள் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன.















இன்றைய விஞ்ஞான சாதனைகளில் தானியங்கி (Automatic) எனும் சொல்லும் நுட்பமும் தனியிடத்தைப் பிடித்திருக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதானே! சூழலில் ஏற்படும் பௌதீக மாற்றங்களை (Physical Changes) உணர்ந்து அவற்றைக் குறியீடுகளாக (Signals) மற்றும் வல்லமை பொருந்திய ஏராளமான உணர்கருவிகள் (Sensors) பல்வேறு வகையிலும் எமக்கு உதவி புரிகின்றன. எல்லா இடங்களையூம் ஆக்கிரமித்திருக்கும் இக்கருவிகளுக்கு வெளிச்சவீடு மட்டும் என்ன விதிவிலக்கா? இங்கும் சூழலில் காணப்படும் ஒளியின் அளவை உணர்ந்து அதற்கேற்ப செயற்படும் ஒளியுணர்கருவி (Light Sensor) பொருத்தப்பட்டுள்ளதனால் இவ்வெளிச்சவீட்டைப் பராமரிப்பவருக்கு ஒரு வேலை மிச்சம். இரவைக் கண்டவுடன் இவ் வெளிச்சவீடு தானாக ஒளிரும் - சூரியனைக் கண்டால்; தானகவே அணையும். இதனால் மின்சாரத்தின் வீண்விரயம் தவிர்க்கப்படுவதுடன் மீனவர்களுக்கான தடங்கலற்ற வழிகாட்டும் சேவையும் உறுதிப்படுத்தப் படுகிறது. இத்தனை நவீன வசதிகளையும் கொண்டு இயங்கும் இலங்கையின் ஒரேயொரு வெளிச்சவீடு மட்டக்களப்பில் அமைந்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் ஓர் விடயமாகும்.

நம் அனைவருக்கும் மூதாதையர் இருப்பதைப் போல எமது வெளிச்சவீட்டிற்கும் ஓர் மூதாதையர் இருக்கிறார். இவ்வெளிச்சவீட்டிலிருந்து மேலும் வடமேற்குத்திசையில் சுமார் 1.5 கிலோமீற்றர் தூர இடைவெளியில் 25 அடி உயரத்தில் சிவப்பு நிற செங்கற்களை வைத்து சுண்ணாம்பினால் கட்டப்பட்ட ஓர் கோபுரம் போன்ற கட்டமைப்பு காணப்படுகின்றது. இதனை இப்பிரதேசத்தவர்கள் “மொட்டைக்கோரி” என அழைக்கின்றனர். உச்சியில் ஓர் இரும்புப் பாளத்தைத் தாங்கியபடி மிகவும் சிதிலமடைந்து காணப்படும் இச் சின்னத்தைப் பற்றிப் பல்வேறு கதைகள் இப்பிரதேச மக்களிடையே உலவுகின்றன. இது முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத ஒரு வெளிச்சவீடு மாத்திரமே! இதன் கட்டுமான வேலைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு பின்னர் புதிய வெளிச்சவீடு கட்டப்பட்டதாக ஒரு சாரார் கூறுகின்றனர். இன்னும் சிலர் ஆதிகாலத்தில் இதுவே வெளிச்சவீடாகப் பாவிக்கப்பட்டு வந்ததாகவும், பின்னர் இது சேதமடைந்துவிட்ட காரணத்தால் புதிய வெளிச்சவீடு அமைக்கப்பட்டதாகவும்; கூறுகின்றனர். திராய்மடு கிராமத்தில் வசிக்கும் திரு.சதாசிவம் கபிரியல் அல்லது மரியசிங்கம் (வயது 72) என்பவர் 1912 ஆம் ஆண்டில் இம் மொட்டைக்கோரி கட்டி முடிக்கப்பட்டதாகவும், இந்தியாவிலிருந்து மட்டக்களப்பிற்கு சரக்குளை ஏற்றி வரும் கப்பல்களுக்கு வழிகாட்டவே இது அமைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். இதன் உச்சியில் ஓர் சிறிய விளக்கு தினம்தினம் ஏற்றப்பட்டு வந்ததாகவும், புதிய வெளிச்சவீட்டின் கட்டுமானத்தைத் தொடர்ந்து இதன் பயன்பாடு அற்றுப்போய் விட்டதாகவும் சுமார் 50 அடிவரை உயரமாக இருந்த இது முறையான பராமரிப்பு இல்லாததால், இன்று பாதியாகக் குறைந்துவிட்டதாகவும் தனது வருத்தத்தைத் தெரிவிக்கிறார். எது எப்படியோ, மட்டக்களப்பு வெளிச்சவீட்டின் வரலாற்றில் இந்த மொட்டைக்கோரியும் இடம்பிடித்துவிட்டது என்பது மட்டும் உண்மையே!

இத்தனை புகழையும் பெருமையையும் தாங்கி மட்டக்களப்பின் மாண்பினைப் பறைசாற்றும் இக்கலங்கரை விளக்கினைக் கலங்கப்படுத்தும் சில காரணிகளும் இல்லாமல் இல்லை. உயரமான கட்டடங்கள் இடி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாவது ஒரு பொதுவான இயல்பு. அதுவும் கடற்கரை - பாலைவனம் போன்ற வெட்டவெளிப் பரப்புகளில் தனித்து நிற்கும் கோபுரங்கள் இரட்டிப்பு ஆபத்தை எதிர்நோக்கக் கூடும். இத்தனை ஆபத்துக்களின் மத்தியில் இக்கட்டடத்தில் ஓர் இடிதாங்கிக் கட்டமைப்பு இல்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

இலங்கையில் வெளிச்சவீடுகள் துறைமுகக் கூட்டுத்தாபனத்தினாலேயே நிர்வகிக்கப்படுகின்ற போதிலும், மட்டக்களப்பு வெளிச்சவீடானது கச்சேரியின் நிர்வாகத்தின் கீழேயே காணப்படுகிறது. எனினும் தற்போது இவ்வெளிச்சவீடும் பூங்காவும் மட்டக்களப்பு மாநகரசபையினால் பராமரிக்கப்பட்டு வருவதுடன் இப்பகுதியின் தூய்மையும் அமைதியும் இங்கு வரும் உல்லாசப் பயணிகளால் துளியும் கெட்டுவிடக்கூடாது என்பதில் மாநகர சபை உறுதியாக இருக்கின்றமை குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஓர் விடயமாகும். இருப்பினும் இதில் மாநகரசபையினர் பூரண வெற்றியை அடைந்திருக்கிறார்களா என்பதில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பாரிய மரங்களினடியில் பரவலாகக் கிடக்கும் பறவைகளின் எச்சங்கள் போல இவ்வெளிச்சவீட்டின் அடியில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் ஐஸ்கிறீம் உறைகளும் குப்பைகளும் தன் நிலையை எண்ணிக் கலங்கிய இக் கலங்கரை விளக்கு உதிர்த்த கண்ணீர்த்துளிகளோ என எண்ணத் தோன்றுகிறது. வானத்து வெண்ணிலவாக வெளிச்சவீடும் அதன் கீழ் நட்சத்திரங்கள் போல பல மின்வவிளக்குகளும் என மிகவும் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்ந்த இப்பிரதேசத்தில் இன்று பல விளக்குக் கம்பங்கள் மட்டுமே எஞ்சியிருக்க விளக்குகள் காணாமல் போயிருக்கின்றன.

புராதன சின்னங்கள் என்பவை எமது கலாசாரத்தின் அடையாளங்கள். வரலாற்றின் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள். ஒரு பழைய தலைமுறையின் தனித்தன்மையைப் பறைசாற்ற தனித்துநிற்கும் சாட்சியங்கள். அந்தவகையில் எமது வெளிச்சவீடும் அன்றைய மட்டக்களப்பு வாழ்க்கை முறையின் வாக்குமூலமாக இன்று திகழ்கிறது. இதனைப் பேணிக் காக்கவேண்டியதும், இதன் பெருமையை எடுத்தியம்புவதும் நம் அனைவரினதும் கடமையாகிறது. இது ஒன்றும் அத்தனை கடினமான காரியம் அல்ல! இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படத்துடன் சேர்த்து இதன் வரலாற்றையும் கொண்டு செல்லவேண்டும் - அவர்களது காலடித் தடங்களைத் தவிர வேறெதனையும் விட்டுச்செல்லவும் கூடாது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்கள் மாநகரசபையினாலும் ஏனைய அமைப்புகளினாலும் மேற்கொள்ளப்படல் வேண்டும். குறிப்பாக சூழல் மற்றும் தொல்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு நம் அனைவருக்கும் இருக்கவேண்டும்!

இக் கலங்கரை விளக்கின் கரைகளைக் கடலலைகள் சீண்டும் காலம் வரை அந்த ஒளியலைகளும் கடலைச் சீண்டிக்கொண்டே இருக்கட்டும்.

-----------------------------------------
ப.முரளிதரன், கல்லடி, மட்டக்களப்பு.