Saturday, February 13, 2010

பட்ட மரங்களும் ஓர் பட்டதாரியும்!

பட்டம் பெற்றபின் வேலை வேண்டி
உண்ணாவிரதம் இருப்பது எத்தனை
கொடுமையானது..........
அடிக்கடி அப்படியொரு நிலைக்கு ஆளாகும் - எமது
சகோதரர்களின் குரலாக - என் இதயத்தைக்
கசக்கும் அந்த நிகழ்வுகள்; இதோ.......


-------------------------
நான் ஒரு பட்டதாரி.
வாழ்க்கைப் பாதையில்
ஓரமாய் நடந்தும்
அனுபவ வாகனங்களில்
அடிபட்டவன்.

மானுடத்தைத் தின்று
மனிதனைத் துப்பும்
பல்கலைக் கழகத்தில்
வெளிப்பட்டவன்.

மரத்திலேறி
கனிபறிப்பதை விடுத்து
பட்டம் விட்டு நிலவைத் தொட
புறப்பட்டவன்.

வேலை தேடுவதே
வேலையாகிப் போன
வேதனைத் தீயில்
வதைபட்டவன்.

எனவே நான் ஒரு பட்டதாரிதான்!

அன்று
உண்ணாமல் உறங்காமல்
படித்தேன்..
பட்டம் பெற!
இன்று
உண்ணாவிரதம் இருக்கிறேன்
வேலைபெற!!

நான் ஒரு பட்டதாரி!

உண்ணாவிரதம் ஒன்றும்
அவ்வளவு சிரமமாயில்லை.....

வேலையற்ற எனக்கு
தினமும் உண்ணாவிரதம் தான்.
நேற்றுவரை வீட்டில்!
இன்று முதல் வீதியில்!!

உண்ணாவிரதம் ஒன்றும்
அவ்வளவு சிரமமாயில்லை.....

இதோ..
மெல்ல மெல்ல
குறைகிறது.
என் உடல் வலிமை மட்டுமல்ல
வேலை கிடைக்குமென்ற - என்
கனவின் கனமும் தான்.

நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!

அரசியல்வாதிகளே...! - இங்கு
உண்ணாமல் இருப்பது
உங்கள் வோட்டுக்கள்தான்.

பெற்ற மனங்களே...! - இங்கு
உறங்காமல் கிடப்பது
உங்கள் உதிரங்கள்தான்.

பஞ்ச பூதங்களே...! - இங்கு
உணர்வின்றிப் படுப்பது
உங்கள் உறுப்புகள் தான்.

நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!

என் முதற் சம்பளம்
வாங்கும் நாள்வரை
மருந்தின் துணையுடன்
உயிரைத்தாங்கும்
என் அம்மா....................

தமயன்வழிச் சீதனமாய்
ஒரு தாவணியாவது கொண்டுசெல்ல
பிறந்த வீட்டிலேயே காத்திருக்கும்
வயது வந்த
என் தங்கை...............

வெறுமையே நிறைந்தாலும்
இளமையே கரைந்தாலும்
வேலை கிடைக்கும்
நாள்வரையாவது
வாழ நினைக்கும்
என் காதலி........

இவர்களுடன்
கைகோர்த்தபடி - காத்திருக்கின்றன
என்
கனவுகளும் இலட்சியங்களும்!

என்ன செய்வேன் நான்?
நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!

கண்கள் மயங்கி
உணர்வுகள் அடங்கி
துவண்டு விழும்
என் தலையைத் - தாங்க
நிச்சயம் நீழும்
இன்னுமொரு
வேலையில்லாப் பட்டதாரியின்
வேதனைக் கரங்கள்.

நாளை
அவனைத் தாங்கவும்
இன்னும் சில கரங்கள்..

அந்த வகையில் கவலையில்லை!

உண்ணாவிரதிகளை
உற்பத்தி பண்ணத்தான்
இருக்கிறதே
பல்கலைக்கழகமெனும்
பல தொழிற்சாலைகள்!

இதோ என் இறுதிச் சிரிப்பு.
இதோ என் கடைசி ஏக்கம்.
என் இறுதிப் பார்வை..
என் கடைசிக் கவிதை..

விடைபெறுகிறேன் நான்.

என் வாழ்வின்
எல்லைக்கோடுவரை - வந்த
அம்மாவின் அன்பு முகம்
தங்கையின் பாசம்
காதலியின் உதடு
நண்பர்களின் இதயம்
இன்னும்
கவிதைகள்
கனவுகள்
இலட்சியங்களுடன்
விடைபெறுகிறேன் நான்.

நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!!

------------------(c) விவிக்தா 2003 ----------------

Friday, February 12, 2010

தியாகங்களே சில தீர்வுகள்

அது காதல் வானில் சிறகடித்துப் பறந்த
ஒரு வானம் பாடியின் வாலிப மனசு...!
இது சேற்றில் சிக்கித் தடுமாறும் ஒரு
நீர்ப் பறவையின் நடுத்தர வயசு..!!

வணக்கம்!

“தியாகங்களே சில தீர்வுகள்” - 2000 ஆம் ஆண்டு, காதலர்தினத்தில் நான் எழுதிய ஓர் சிறுகதை. பிரிந்து போன காதலர்கள் பத்து வருடங்களின் பின்னர் சந்தித்துக்கொள்வதாய் ஓர் கற்பனை. இதில் வரும் கதாபாத்திரம் நானேதான்! இதில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் அனைத்தும் உண்மையே. எனினும் பத்துவருடங்களின் முன் நான் கற்பனை செய்த முடிவை சரியாக பத்து வருடங்களின் பின்னர் இந்த 2010 காதலர்தினத்தில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமாக தெரிகிறது. “எந்தக்காயத்தையும் காலம் ஆற்றிவிடும்” என்பது எத்தனை நிதர்சனமான கூற்று...

இன்று காதல் வானில் சிறகடித்துப் பறக்கின்ற அத்தனை வாலிப மனங்களுக்கும் இக்கதை சமர்ப்பணம்!
------------------------------------------



முறு".... முறுதானே......!

ச.... 'சவ்வு".... நீயா? நல்லா இருக்கிறியா?

ஏதோ இருக்கிறன். நீ எப்பிடி?

இன்னும் உயிரோடதான் இருக்கிறன்.

பழச மறக்கலயா நீ.....!

காதல் என்பது கல்லுல செதுக்கின கோடு மாதிரி. கல்லு உடையலாம்.. ஆனா கோடு அழியாது!

என்ன.. ஒரு பத்து வருஷத்க்குப் பிறகு மீண்டும் மலரும் நினைவுகளா?

அப்ப நீ பழச எல்லாம் மறந்திட்டியா..?

இல்ல.. மறக்கல்ல. ஆனா உன்னமாதிரி வெளிப்படையா கதைக்க இப்ப எண்ட நிலையும் சூழலும் இடம் தராது.

விளங்குது.

நீ தான் கடவுள் எல்லாம் இல்ல எண்டு சொல்லுவியே..... இப்ப என்ன இந்த தேவாலயத்தில......

என்ன செய்ய 'சவ்வு".... வாழ்க்கைல மனிதர்கள நம்பி ஏமாந்த பிறகுதானே கடவுள் மேல நம்பிக்கை வருது.

நான் உன்ன மட்டும் ஏமாத்தல, என்னையும் நானே ஏமாத்திட்டனோ எண்டு இப்ப நினைக்கிறன்.

உன்ன நினைச்சு நான் அப்பிடி சொல்லல.. சும்மா பொதுவாத்தான் சொல்றன்.

ஆனா எனக்கும் மனசாட்சி இருக்கு தானே! காதலிக்கும் போதே உன்ன ஏமாத்திட்டு துறவியாப் போறதும் ஒரு வகையான துரோகம் தானே....?

ஏதோ இப்ப நீ புனிதமான ஒரு துறைல பொறுப்பு வாய்ந்த துறவி. நீ 'சிஸ்டராப்" போய் ஒரு பத்து வருஷம் இருக்குமா?

ம்.... என்ன செய்ய 'முறு"... அந்த வயசில உன்ன மறக்கவும் முடியல, வீட்டு ஆக்கள எதிர்க்கவும் துணிவில்ல.

உண்மைதான்.. உன் கருணை நிறைந்த உள்ளம் எனக்குக் கிடைக்காமப் போனாலும் இப்ப அது பலருக்குப் பயன்படுதே அது நல்லது தானே.

நீ அடிக்கடி இந்தக் கோயிலுக்கு வருவியா?

ஒவ்வாரு வாரமும் வருவன். ஆனா உன்ன சந்திக்கிறதில்லையே......

நான் போன கிழமைல இருந்துதான் இங்க இருக்கிறன். இப்பிடி உன்ன சந்திப்பன் எண்டு எதிர்பார்க்கல.

சந்திச்சதில ஏதாவது வருத்தமா?

சரியா சொல்லத் தெரியல்ல. நீ எப்பிடி..? திருமணம் முடிஞ்சா..? எத்தன பிள்ளைகள்..?

சவ்வு.... உன் வாழ்க்கை பார்த்த உடனே எப்பிடி எண்டு தெரியுது! எண்ட வாழ்க்க அப்பிடி இல்ல. ஆனா நாம ரெண்டு பேரும் ஒரே தோணிலதான்.

என்ன... நீ இன்னும் திருமணம் முடிக்கலயா? ஏன்?

'நான் தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹான் இல்ல: தடுக்கி விழுந்த ஷாஜஹான்"

ஏன் உனக்கு வேற 'மும்தாஜ்" கிடைக்கலயா?

அப்பிடி இல்ல,, வேற மும்தாஜ நான் நினைக்கல.

ஏன் அப்பிடி?

இது என்ன கேள்வி சவ்வு? 'எல்லாப் பூக்களும் காயாக மாறினால் உலகம் தாங்காது... சில மரங்கள் ஒரு தடவைக்குமேல் பூக்காது".

பூவையும் மரத்தையும் விடு, படிப்பெல்லாம் எப்பிடி? அந்தப்பூவாவது நல்லா வாசம் வீசுதா?

அத ஏன் கொஞ்சம் சந்தேகமாக் கேக்கிறா...?

இல்ல.. உன்னப்பற்றிய பழைய ஞாபகங்கள் சொல்லுது நீ ஒரு நல்ல நிலையில இருப்பா எண்டு. ஆனா.....

என்ன ஆனா.....

உன்... உன்.... தோற்றம் அப்பிடிச் சொல்லல...!

நாங்க என்ன பிறந்த உடனேயா படிக்கத் தொடங்கினம்?

அதுக்கு....!?

அதுதான் இடைல தொடங்கின படிப்ப இடையிலேயே விட்டுட்டன்.

படிப்ப - இடைல - விட்டுட்டியா? அத இவ்வளவு சிம்பிளா சொல்லுறியா?

உண்மைய எப்பிடி சொன்னா என்ன?

சரி விடு, ஏதோ முப்பது வயசுக்குள்ள கார் வாங்கோணும், வீடு கட்டோணும் எண்டெல்லாம் இலட்சியம் வச்சிருந்தியே... அதையாவது செய்தியா?

இந்தக் கோயில் நல்ல அமைதியான சூழல்ல அமைஞ்சிருக்கு இல்லையா?

கதைய மாத்தாத. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு. செய்தியா?

இப்ப எனக்கு 35 வயசு சவ்வு. வாடகை ரூம்ல இருந்து நடந்துதான் இங்க வந்தன்.

எ...எப்பிடி இருந்திருக்கவேண்டியவன் நீ... எல்லாம் என்னாலதான்..!

ஏய் என்ன அழுறியா?

இல்ல...

அப்ப இந்தப்பக்கம் திரும்பு. முதல்ல கண்ணத் துட..

உன்ன நினைக்க எனக்குக் கவலையா இருக்கு முறு!

நீ இப்பிடி கவலைப்படுறதப் பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கு சவ்வு!!

சரியான கல்லு மனம் உனக்கு.

வாழ்க்கைல எதிர்பாராத இடிகளைத் தாங்கிக்கொள்ள அதுதான் வசதியானது.

ஏன் ஒருமாதிரி விரக்தியாக் கதைக்கிறா...? இப்ப உனக்கு வாழ்க்கைல எந்த இலட்சியமும் இல்லையா?

யார் சொன்னது..? இலட்சியம் இல்லாம ஒரு வாழ்க்கையா? இப்பகூட நான் ஒரு இலட்சியத்தோடதான் வாழுறன். இதுவும் காதல் மாதிரி ஒரு உயர்ந்த இலட்சியம் தான்.

அப்பிடியா? என்ன இலட்சியம் அது?

எல்லா விஷயங்களையும் வெளில சொல்லமுடியாது சவ்வு.

உன்னில இப்ப நிறைய மாற்றம் தெரியுது. முந்தியெல்லாம் நீ எதையுமே வெளிப்படையாத்தான் கதைப்பா.

'அது காதல் வானில் சிறகடித்துப் பறந்த ஒரு வானம்பாடியின் வாலிப மனசு. இது சேற்றில் சிக்கித் தடுமாறும் ஒரு நீர்ப்பறவையின் நடுத்தர வயசு"

நான் கூட இப்ப ஒரு இலட்சியம் வச்சிருக்கிறன்.

என்ன? சாகும் வரைக்கும் உயிரோட இருக்கப்போறியா?

பார்த்தியா உன் 'கடி" குணம் இன்னும் மாறல 'முறு".

நீ கூடத்தான் என்ன அப்பிடிக் கூப்பிடுறத இன்னும் மறக்கல போல...

உண்மைதான். இனி நான் உன்ன அப்பிடிக் கூப்பிடல. ஆனா நீ மட்டும் என்ன சவ்வு எண்டு கூப்பிடலாமா?

துறவியாப் போனது நீ தான். நான் இல்ல.

அதுவும் சரிதான்.

ஏதோ ஒரு மன நிம்மதிக்காகதத்தான் இந்தக் கோயிலுக்கு வருவன். இனி நான் இங்க வரமாட்டன்.

நான் உண்ட வாழ்க்கைல குறுக்கிடுற ஒவ்வொரு தடவையும் நீ ஏதோ ஒன்றை இழக்கிறா இல்லையா முறு.......!! சொறி.. இனி இப்பிடி கூப்பிட மாட்டன்.

என்ன... சென்டிமென்டா?

உனக்கு என்னில கொஞ்சம் கூட கோபம் இல்லையா?

ஒரு சின்னத் துளி கூட இல்ல.

ஏன்?

நாங்க திருமணம் முடிச்சிருந்தா, என் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல அன்னை கிடைச்சிருக்கும். ஆனா உலகம் ஒரு அருமையான சகோதரியை இழந்திருக்கும். உண்மையைச் சொல்லப் போனால் உன்னமாதிரி நல்ல உள்ளம் கொண்டவர்கள் 'சிஸ்டராப்" போறதாலதான் அந்தப் புனிதம் இன்னும் கெடாம இருக்கு.

மிகவும் நன்றி.

எதுக்கு?

நாங்க என்னதான் ஒரு புரிந்துணர்வோட பிரிஞ்சிருந்தாலும், இவ்வளவு காலமும் மனசில ஒரு சின்ன உறுத்தல் இருந்திச்சி.

இனி எந்த உறுத்தலும் இல்லாம நீ உன் சேவையைத் தொடரலாம். எங்கட கடைசிச் சந்திப்பு இதுவாத்தான் இருக்கும்.

நான் உன்ன அடுத்த தடவை சத்திக்கும்போது இந்தத் தாடியெல்லாம் எடுத்து, தலை முடியெல்லாம் வெட்டி மனுஷன் மாதிரி இருக்கோனும். சரியா?

அதுக்கு அவசியமில்ல சவ்வு.

ஏன்?

நாளைக்குக் காலைல உனக்கு எல்லாம் விழங்கும்.

அப்பிடி என்ன புதிர்..?

ஒரு பத்துப் பன்னிரண்டு மணி நேரம் பொறுமையில்லையா..?

என்ன மணிக்கூட்டப் பார்க்கிறா... போகப்போறியா..?

ம்... நான் போகவேண்டிய நேரம் வந்திட்டு சவ்வு! இப்ப நான் ஒரு வேலையாப் போறன். அதுல நான் முழு வெற்றி அடையவேணும் எண்டு வாழ்த்தமாட்டியா?

கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக!

குட்பை சவ்வு !!

குட்பை!!!

(உடலோடு பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டைத் தடவிப் பார்த்தபடியே தனது இலக்கு நோக்கிப் புறப்பட்டான் அந்தத் தற்கொலைப்படைப் போராளி)

----------- (C) விவிக்தா - 14 Feb 2000 -------------