Saturday, February 13, 2010

பட்ட மரங்களும் ஓர் பட்டதாரியும்!

பட்டம் பெற்றபின் வேலை வேண்டி
உண்ணாவிரதம் இருப்பது எத்தனை
கொடுமையானது..........
அடிக்கடி அப்படியொரு நிலைக்கு ஆளாகும் - எமது
சகோதரர்களின் குரலாக - என் இதயத்தைக்
கசக்கும் அந்த நிகழ்வுகள்; இதோ.......


-------------------------
நான் ஒரு பட்டதாரி.
வாழ்க்கைப் பாதையில்
ஓரமாய் நடந்தும்
அனுபவ வாகனங்களில்
அடிபட்டவன்.

மானுடத்தைத் தின்று
மனிதனைத் துப்பும்
பல்கலைக் கழகத்தில்
வெளிப்பட்டவன்.

மரத்திலேறி
கனிபறிப்பதை விடுத்து
பட்டம் விட்டு நிலவைத் தொட
புறப்பட்டவன்.

வேலை தேடுவதே
வேலையாகிப் போன
வேதனைத் தீயில்
வதைபட்டவன்.

எனவே நான் ஒரு பட்டதாரிதான்!

அன்று
உண்ணாமல் உறங்காமல்
படித்தேன்..
பட்டம் பெற!
இன்று
உண்ணாவிரதம் இருக்கிறேன்
வேலைபெற!!

நான் ஒரு பட்டதாரி!

உண்ணாவிரதம் ஒன்றும்
அவ்வளவு சிரமமாயில்லை.....

வேலையற்ற எனக்கு
தினமும் உண்ணாவிரதம் தான்.
நேற்றுவரை வீட்டில்!
இன்று முதல் வீதியில்!!

உண்ணாவிரதம் ஒன்றும்
அவ்வளவு சிரமமாயில்லை.....

இதோ..
மெல்ல மெல்ல
குறைகிறது.
என் உடல் வலிமை மட்டுமல்ல
வேலை கிடைக்குமென்ற - என்
கனவின் கனமும் தான்.

நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!

அரசியல்வாதிகளே...! - இங்கு
உண்ணாமல் இருப்பது
உங்கள் வோட்டுக்கள்தான்.

பெற்ற மனங்களே...! - இங்கு
உறங்காமல் கிடப்பது
உங்கள் உதிரங்கள்தான்.

பஞ்ச பூதங்களே...! - இங்கு
உணர்வின்றிப் படுப்பது
உங்கள் உறுப்புகள் தான்.

நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!

என் முதற் சம்பளம்
வாங்கும் நாள்வரை
மருந்தின் துணையுடன்
உயிரைத்தாங்கும்
என் அம்மா....................

தமயன்வழிச் சீதனமாய்
ஒரு தாவணியாவது கொண்டுசெல்ல
பிறந்த வீட்டிலேயே காத்திருக்கும்
வயது வந்த
என் தங்கை...............

வெறுமையே நிறைந்தாலும்
இளமையே கரைந்தாலும்
வேலை கிடைக்கும்
நாள்வரையாவது
வாழ நினைக்கும்
என் காதலி........

இவர்களுடன்
கைகோர்த்தபடி - காத்திருக்கின்றன
என்
கனவுகளும் இலட்சியங்களும்!

என்ன செய்வேன் நான்?
நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!

கண்கள் மயங்கி
உணர்வுகள் அடங்கி
துவண்டு விழும்
என் தலையைத் - தாங்க
நிச்சயம் நீழும்
இன்னுமொரு
வேலையில்லாப் பட்டதாரியின்
வேதனைக் கரங்கள்.

நாளை
அவனைத் தாங்கவும்
இன்னும் சில கரங்கள்..

அந்த வகையில் கவலையில்லை!

உண்ணாவிரதிகளை
உற்பத்தி பண்ணத்தான்
இருக்கிறதே
பல்கலைக்கழகமெனும்
பல தொழிற்சாலைகள்!

இதோ என் இறுதிச் சிரிப்பு.
இதோ என் கடைசி ஏக்கம்.
என் இறுதிப் பார்வை..
என் கடைசிக் கவிதை..

விடைபெறுகிறேன் நான்.

என் வாழ்வின்
எல்லைக்கோடுவரை - வந்த
அம்மாவின் அன்பு முகம்
தங்கையின் பாசம்
காதலியின் உதடு
நண்பர்களின் இதயம்
இன்னும்
கவிதைகள்
கனவுகள்
இலட்சியங்களுடன்
விடைபெறுகிறேன் நான்.

நான் ஒரு வேலையில்லாப் பட்டதாரி!!

------------------(c) விவிக்தா 2003 ----------------

4 comments:

ManA © said...

மிகவும் அருமை.. விடயத்தை மிக அழகாக கூறியுள்ளீர்கள். (அனுபவமோ)

விவிக்தா said...

நன்றி மனோ. உண்ணாவிரதம் அளவிற்கு போகவில்லை, ஆனாலும் கொழும்பில் வேலை தேடி அலைந்த நாட்களை என்றுமே மறக்க முடியாது. அனுபவமே தான்!

அதி கர்விதா AK 63 said...

Very good. post more of your creations...

விவிக்தா said...

Thanks for the comments AK63. I have few other in this blog. Have to post more, but very limited time I have to write in Tamil.

Thanks.